தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்!

ஜனாதிபதித் தேர்தலில் என்னை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமானதாக எடுத்த தீர்மானத்தை இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்.”

– இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவு தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர், சஜித் பிரேமதாஸவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிங்கள, முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கிலுள்ள தமிழ் மக்களும் எனக்கே வாக்குகளை அள்ளி வழங்கத் தயாராக இருக்கின்றார்கள். இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் என்னை ஆதரிக்க முடிவெடுத்துள்ளமையிட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் என்னையே ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். கூட்டமைப்பு மாற்றுத் தீர்மானம் எடுக்காது என்றே நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு எனது தேர்தல் அறிக்கையில் தெளிவாக உள்ளது. எனவே, நான் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மக்களின் துயரைத் துடைப்பேன். அதுமட்டுமல்ல இந்த நாட்டில் மூவின மக்களும் சமவுரிமையுடன் ஒற்றுமையாக வாழும் நிலைமையை உருவாக்குவேன்.

இந்த நாட்டிலுள்ள அனைவரும் ‘இலங்கை’ என்ற ஒரு தாயின் வயிற்றுப்பிள்ளைகள். இதற்குள் எந்தவித வேற்றுமையும் எனது ஆட்சியில் இருக்கவேமாட்டாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்