சஜித் பிரேமதாச பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் – ரோஷி சேனாநாயக்க

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள், நாட்டில் நிரந்தரமாக பேணப்படவேண்டிய விடயங்களாகும் என கொழும்பு மாநகர முதல்வர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- பெரியபோரதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரோஷி சேனாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது “பெண்களுக்கான சுயாதீனமான ஒரு ஆணைக்குழு அமைத்தல். அதனூடாக பாகுபாடின்றி செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

தனியார் மற்றும் அரச அமைப்புக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்.

அனைத்து விடயங்களிலும் பெண்கள் சமமாக நடத்தப்படுவதோடு, நிவாரணங்களைப் பெறுவதற்குரிய வழிமுறையை உருவாக்கி பெண்களது உரிமைகளைப் பாதுகாத்தல்.

மேலும் பெண்கள் எளிதில் அணுகக்கூடிய சட்டங்களை வைத்து, பெண்களுக்கு அநீதி விளைவிக்கப்படுகின்ற நேரத்தில், இலவசமாக சட்டத்தரணிகள் வாதிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

பெண்களின் பொருளாதாரம், பெண்களின் வாழ்வாதாம், வேலைவாய்ப்பு போன்ற  விடயங்களில் எதிர்காலத்தில் பெண்களை முன்னுரிமைப்படுத்தி அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தி உதவிக்கரம் நீட்டவுள்ளோம்.

போரினால் கணவனை இழந்த குடும்பங்களுக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் வீடமைப்பு, கடன்வசதி, வாழ்வாதாரம் போன்ற உதவிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தன்னிறைவான குடும்பங்களை உருவாக்கும் பொருட்டு சிறந்த சமுதாய நெறிமுறைகள் கட்டியெழுப்பப்படும்.

எனவே அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவை  இந்த நாட்டை ஜனாதிபதியாக்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்