மஹிந்தவின் விளக்கம் முட்டாள்தனமானது; அவரைப்போல் மக்கள் கோமாளிகள் அல்லர் – சஜித் தக்க பதிலடி

“எனது தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு ஆபத்தானது அல்ல. அதில் புதிய அரசமைப்பு தொடர்பில் மூவின மக்களும் விளங்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளேன். ஆனால், இதைத் திரிபுபடுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ள விளக்கம் முட்டாள்தனமானது. அவரைப் போல் நாட்டு மக்களை ஏமாற்றுபவன் நான் அல்லன். அவரைப் போல் நாட்டு மக்கள் கோமாளிகள் அல்லர்.”

– இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு வரைபை விட சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆபத்தானது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஐக்கிய இலங்கைக்குள் – ஒருமித்த நாட்டுக்குள் ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்றும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நான் ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளேன் என்று மஹிந்த ராஜபக்ச போலியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவரின் குற்றச்சாட்டை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வே எனது இலக்கு” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்