பங்காளிகளுடன் ஆலோசித்தபின்பே தனித்து முடிவெடுத்தோம் – சிவமோகன்

இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஆதரவு குறித்து தனித்து முடிவெடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், பங்காளிக்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஏற்கனவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றில் நடைபெற்றது.

அந்த நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சகல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அப்போது நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆலோசித்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என்ற ஒரு முடிவை எடுத்திருந்தோம்.

ஆனால் இந்த முடிவை உடனே அறிவிப்பதில்லை என்றும் இன்னும் ஒரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர் தனது விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை என்பதால் அவர் வெளியிட்ட பின்னர் முடிவை அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனத்தைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சி தனது ஆதரவை அறிவித்தது. ஆனால் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர்தான் என்ன தீர்மானம் எடுத்தோம் என்ற வரைபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படியே நாம் செல்கின்றோமே தவிர எவரையும் தவிர்த்துவிட்டு முடிவெடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்