10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ்

அபுதாபியில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடவுள்ளார்.

இந்தத் தொடரில் அவர் டெல்லி வூல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

சகலதுறை வீரரான அசேல குணரட்ன மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார ஆகியோரும் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

லசித் மாலிங்க, ஷெஹான் ஜயசூரிய, வனிந்து ஹசரங்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று (06) நடைபெறவுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் லக்னவ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னரான 6 மாதங்களில் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.

இதனிடையே சர்வதேச ஒருநாள் அரங்கில் ஆப்கானிஸ்தான் இறுதியாக விளையாடியுள்ள 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் கீரன் பொலார்ட் மேற்கிந்தியத்தீவுகள் அணியை பிரநிதித்துவப்படுத்துவதுடன், இந்தத் தொடரில் அணித் தலைவராகவும் செயற்படவுள்ளார்.

நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கானின் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் போட்டி இதுவாகும்.

இன்றைய போட்டி நடைபெறும் லக்னவ் மைதானத்தில் ஓராண்டுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டியொன்று நடத்தப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்