அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான் அரசியற் தீர்வினைத் தருவேன் என்று கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கின்றாரா? அரசியற் தீர்வு சம்பந்தமாக எதையும் சொல்லியிருக்கின்றாரா? இல்லை, அவ்வாறான ஒருவருக்கு நாங்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்.

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல், நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.

அதனை நாங்கள் பெறுவதாக இருந்தால், அதனை நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால். எமது நியாயமான நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் சர்வதேச சமூகம் எங்களுடன் இருக்கின்றபோது இவற்றை நிறைவேற்றுவதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது அதற்கு உதவாது, அதற்குப் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை அனைவரும் உணர்ந்து தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்