தமிழ்-முஸ்லிம் 100 வீத வாக்குப்பதிவே அராஜகக் காரர்களைத் தோற்கடிக்கும்! தமிழரசின் மானிப்பாய் தொகுதி தலைவர் பிரகாஷ்

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் – முஸ்லிம் மக்களினது 100 வீத வாக்குப் பதிவின் ஊடாகவே எமது இனத்தைக் கொன்றொழித்த கோட்டாபயவை எம்மால் தோற்கடிக்கமுடியும்.

– இவ்வாறு தெரிவித்தார் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவருமான தி.பிரகாஷ்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

இது ஜனாதிபதித் தேர்தல் யார் வென்றால் என்ன, யார் தோற்றால் என்ன என்று நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. ஏனைய தேர்தலைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இதுவாகும்.

நாம் யாரை ஆதரிக்கின்றோம் என்பது எம்மைப் பொறுத்தமட்டில் முக்கியமல்ல. ஆனால், இந்தத் தேர்தலில் யார் வரக்கூடாது என்பதில் எமது கவனம் இருக்கவேண்டும். இந்தத் தேர்தலை நாம் மிகவும் புத்திக்கூர்மையுடன் அணுகவேண்டும்.

மூன்று தசாப்தகாலம் கொடிய போரின் அதிர்வுகளைச் சந்தித்து எமது பெரும் சொத்தாகிய கல்வியையே இழந்தவர்கள் நாங்கள். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் வந்த அப்பாவித் தமிழ் மக்களைத் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக இன அழிப்புச் செய்தவர் இன்று எமது மக்களிடம் வாக்குக்காக வந்திருக்கின்றார். 10 வருடங்களில் அந்தளவுக்கு மறக்கும் வடுவையா அவரது செயற்பாடு ஏற்படுத்தியது. இன்றும் தமிழர் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக தகித்துக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் மண் இன்றும் செங்குருதியால் சிவந்து உள்ளது.

தாய் மரணத்தை அடைந்தபின்னும் தாய்மார்பைச் சுவைத்தபடி சேய் தூங்கிய காட்சி இன்றும் எம் ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழன் மனதிலும் பெரும் கறையாக நிழலாடுகின்றது. அவ்வாறான வடுவை எமக்கு ஏற்படுத்திய கோட்டாபயவுக்கு தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்தவன் எவனும் வாக்களிக்கமாட்டான்.

அடுத்து 35 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாணத்து வடிவேலுவும் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார். 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்தவின் வெற்றியை அதிகரிப்பதற்காக அவர் குருநாகலில் போட்டியிட்டார். அதிகப்பெரும்பான்மை வாக்குகள் மஹிந்தவுக்குக் கிடைத்தன. சிங்கள மக்கள் எமது சிங்கள மாவட்டத்தில் மஹிந்தவைத் தோற்கடிக்க ஒரு ‘புலி’ வந்து தேர்தலில் நிற்கின்றது என்று சிந்தித்தார்கள். மஹிந்தவின் பிரசாரமும் அவ்வாறுதான் அமைந்தது. ஆனால், அந்த மக்களுக்குத் தெரியாது அது மஹிந்தவால் காசு கொடுத்து நிறுத்தப்பட்ட வெறும் பூணை என்று. தற்போது தமிழ் மக்களின் வாக்கைச் சிதறடித்து கோட்டாவின் வெற்றியை உறுதிப்படுத்த அந்தப் பூணை காசுவாங்கிக்கொண்டு தேர்தலில் நிற்கின்றது. அதற்குப் பின்னால் சில அல்லக்கைகள் திரிகின்றார்கள். இந்த யாழ்ப்பாணத்து வடிவேலுவை மஹிந்த தேர்தலில் நிறுத்தியமைக்குக் காரணம் தமிழ் மக்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்காவிட்டாலும் வடக்கில் ஜனாதிபதிப் பதவிக்கு வருவதற்கு புலி போட்டியிடுகின்றது. சிங்கள மக்களே தெற்கில் உங்கள் ஒருமித்த வாக்கும் எனக்கு வேண்டும்.  சஜித்துக்கு, அனுரவுக்கு, மகேஸ் சேனநாயக்க என்று 34 பேருக்கு எமது மக்களின் வாக்கு சிதறிப்போக, தமிழ் மக்கள் ஒன்றாகப் புலிக்கு வாக்களித்து வெல்லவைத்தால் நாம் தமிழ் மக்களுக்குக் கீழேதான் என்று பிரசாரம் செய்வதற்காகவே இந்த வடிவேலு தேர்தல் களத்தில் மஹிந்தவால் இறக்கப்பட்டார்.

வாக்களிப்பைப் புறக்கணிப்போம் என்று இன்னொரு விசர் கூட்டம் கூவித்திரிகின்றது. நாம் வாக்களிப்பைப் புறக்கணிப்போமானால் அதுவும் நாம் தோற்கவேண்டும் என்று நினைக்கின்ற – எமது இனத்தை அழித்த – வேட்பாளரை வெல்ல வைப்பதாக அமையும். விடுதலைப் புலிகளின் காலத்தில் வாக்களிப்பைப் புறக்கணித்தமை வேறு. அப்போ இங்கு ஒரு தனி அரசு நடத்தப்பட்டது. முப்படைகள் இருந்தன, நீதித்துறை, நிர்வாகத்துறை என்பன இருந்தன. அப்போ தெற்கை இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்ற நிலை இருந்தது. நாம் பேரம்பேசும் சக்தியோடு சமபலத்துடன் இருந்தோம். ஆனால், தற்போதைய சூழ்நிலை வேறு. இந்தச் சூழலில் நாம் வாக்களிப்பைப் புறக்கணித்தால் எம்மைவிட முட்டாள்கள் வேறு எவரும் இருக்கமாட்டார்கள்.

ஆகவே, நாம் புத்திக்கூர்மையாக சிந்திக்கவேண்டும். அனைவரையும் வாக்களிக்கச் செய்யவேண்டும். அதேநேரம் எமது அனைவரது வாக்கும் ஒருவருக்காக இருக்கவேண்டும். யாழ்ப்பாணத்து வடிவேலுவுக்கு வாக்களிப்பது வெறும் சகட்டுமேனி துப்பாக்கிப் பிரயோகம் போன்றது. 35 வேட்பாளர்களில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர்கள் ஒருவர் கோட்டாபய மற்றையவர் சஜித். இவர்களில் யார் வெற்றிபெறக்கூடாது என்று சிந்திப்போம். மாற்றுக்கருத்தின்றி உண்மையான தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் கோட்டா வரக்கூடாது என்றுதான் சொல்வார்கள். அப்போ எம்மிடமிருக்கும் அடுத்த தெரிவு சஜித் மட்டுமே.

ஆகவே, சஜித்தின் அன்னச் சின்னத்துக்கு அனைத்து தமிழ் – முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக வாக்களித்து, எமது – தமிழ் பேசும் மக்கள் நாட்டின் ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் உரித்துடையவர்கள் என்ற பெருமையை எமதாக்குவோம் – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்