மஹிந்த தரப்பினர் பிள்ளையானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன? சம்பந்தன் கேள்வி

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களின் கொலைகளுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்காத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பிள்ளையானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “2005ம் ஆண்டு வடக்குகிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததன் விளைவாக மஹிந்த வெற்றி பெற்றார். 2005 தொடக்கம் 2015 வரை எமது மக்கள் பட்ட துயரங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவ்விதமான நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்களப் பிரதேசங்களில் கடுமையான போட்டியாக இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளில் முடிவு தங்கியுள்ளது என்ற கருத்தும் நிலவுகின்றது. எமது மக்கள் தெளிவாக முடிவெடுத்து செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக, தமிழ் மக்களை அடக்குவதற்காக. இவ்வாறான சிந்தனை கொண்டு செயலாற்றுகின்றவர்களை நாங்கள் ஆதரிக்க முடியுமா?

மாணவர்கள், ஊடகவியலாளர், அரசியல்வாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சாதாரண பொதுமக்கள் எனப் பலரும் கொலை செய்ய்பட்டார்கள். இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றனவா?

13வது திருத்தத்தை மாற்றி அதிகாரத்தைக் குறைப்பதற்கு முயற்சித்தார்கள். எமது செயற்பாடுகளால் அது தடுக்கப்பட்டது. இவ்விதமான ஒருவர் நமக்கு முறையான அரசில் தீர்வினைத் தருவாரா?

அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான் அரசியல் தீர்வினைத் தருவேன் என்று அவரது விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கின்றாரா? அரசியற் தீர்வு சம்பந்தமாக எதையும் சொல்லியிருக்கின்றாரா? அவ்வாறான ஒருவருக்கு நாங்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்.

தேர்தல் அறிவிப்பின் பின்னர் சஜித் பிரேமதாசவை நான் சந்தித்த போது என்னிடம் கேட்டார் நீங்கள் என்னவிதமான அரசியற் தீர்வை எதிர்பார்க்கின்றீர்கள் என்று.

நான் கூறினேன் தங்கள் தந்தை சொன்னார் என்னால் ஈழம்தர முடியாது ஆனால் ஈழத்தை விட எல்லாம் தருவேன் என்று. அதேபோன்று இன்று நாங்கள் ஈழத்தைக் கேட்கவில்லை. எல்லாம் கேட்கின்றோம். அதியுச்ச அதிகாரப் பங்கீட்டைக் கேட்கின்றோம். எமது மக்கள் தங்கள் சொந்தப் பிரதேசங்களில் தாங்களின் தீர்மானத்தை நிறைவேற்ற அழுல்ப்படுத்தக் கூடிய நிலைமை இருக்க வேண்டும்.

2018 ஒக்டோபர் குழப்பம் ஏற்பட்டிருக்காவிட்டால் எம்மால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு முழுமை அடைந்திருக்கும். அதனைக் குழப்புவதற்காகத்தான் அதற்கு தாமதத்தை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்கினார்கள்.

அதனை நிறைவேற்றும் ஜனாதிபதி வரவேண்டும். யார் அந்த ஜனாதிபதி? சஜித் பிரேமதாசவா? கோட்டாபய ராஜபக்ஷவா? எல்லோரும் ஒற்றுமையாகச் சேர்ந்து, வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்