கொடூரன் கோட்டாவுக்குப் பாடம் புகட்ட சஜித்துக்கு வாக்களிப்பதுதான் ஒரே வழி கிழக்கில் சுமந்திரன் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்த கொடூரன் கோட்டாபய ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டுமாயின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் எமது மக்களுக்கு நடந்தது என்ன? அதனை நாங்கள் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், அந்தக் கொடூரங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.

இறுதிப் போரில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டார்கள். அதற்கான தீர்மானத்தை எடுத்தவர் கோட்டாபயதான்.

அதேவேளை, வெள்ளை வான் கடத்தலின் பிரதான சூத்திரதாரியும் கோட்டாபயதான். அவரால் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குட்படுத்தி கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்று கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்றின் சாரதியாகப் பணியாற்றியவர் பரபரப்புத் தகவலை இப்போது வெளியிட்டுள்ளார்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் குளம் ஒன்றில் வீசப்பட்டு அங்குள்ள முதலைகளுக்கு இரையாக்கப்பட்டார்கள் என்றும் குறித்த சாரதி கூறியுள்ளார்.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எமது மக்கள் பலர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேவேளை, அந்தக் காலப்பகுதியில் எமது மக்கள் பலர் கைதுசெய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் தீர்மானங்களை எடுத்தவராக – உத்தரவுகளை வழங்கியவராக கோட்டாபய ராஜபக்சவே திகழ்கின்றார்.

இப்படித் தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்த கொடூரன் கோட்டாபய ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டுமாயின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்