தமிழர்களைக் கொன்றழித்த கோட்டாபயவை விரட்டுங்கள் – கூட்டமைப்பின் எம்.பி. சரா வேண்டுகோள்

“யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே எம் முன்பாக உள்ள கேள்வி. முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்றழித்த கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவராக இருந்தால் நாம் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். எனவே, தற்போதுள்ள நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து வட்டுக்கோட்டையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய ராஜபக்ச வர முன்னரே மணியடித்து விட்டார். அவர்களுக்கு போரில் மரணித்த விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக இருக்கலாம், ஆனால், எமக்கு அவர்கள் மாவீரர்கள். நாம் அவர்களை அஞ்சலிப்பது எதிர்வரும் 16ஆம் திகதி வரவுள்ள முடிவிலேயே உள்ளது.

கோட்டாபய என்றைக்கும் தமிழர்களுக்கு விரோதியாகவே செயற்படுகின்றார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கும்பலாக வைத்துச் சுட்டப்பட்டவர்கள் என்று அதிகாரத்தில் இருந்தபோது ராஜபக்ச தரப்பினர் செய்தவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் என்றே சிந்திக்க வேண்டும்.

2009ஆம் ஆண்டில் யாரால் முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டது? இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இன்று தமக்கு எதுவும் தெரியாது என்று கோட்டாபய தரப்பினர் கைவிரிக்கின்றனர். தங்களுக்குத் தெரியாது, தாங்கள் பொறுப்பில்லை என்பதே அனைத்துக்கும் அவர்களின் பதிலாக இருக்கின்றது. அவர்களின் சிந்தனையில் தமிழ் மக்கள் மனிதர்கள் அல்லர்.

அப்படியானவர்களுக்கு இங்கிருந்து சில அடிவருடிகள் வாக்குக் கேட்டு வருகின்றனர். இதை எவ்வாறு கூறுவது? அவர்களின் வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ 2009ஆம் ஆண்டுவரை எத்தனையோ பேர் காணாமல்போயிருக்கலாம். அவற்றை எல்லாம் மறந்து விட்டனர்.

அன்று 10 வயதில் இருந்தவர்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது. அவர்களுக்குச் சரியான விளக்கம் இல்லை. அவர்கள் பெரும்பான்மைக் கட்சிகளின் பின்பாக பசப்பு வார்த்தைகளை நம்பித் திரிகின்றனர். இந்தத் தேர்தல் முடிந்ததும் அவர்கள் கைவிடப்பட்டுவிடுவார்கள். அதை அந்த இளைஞர்கள் அறிந்திருக்கவில்லை.

தமிழ் மக்களைக் கொன்றழித்த கோட்டாபயவுக்காக யாழ்ப்பாணத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக வேலை செய்கின்றனர். ஒருவர் டக்ளஸ் தேவானந்தா; மற்றவர் அங்கஜன் இராமநாதன்.

போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்று அவர்கள் உணரவில்லை. இந்தச் சமூகம் தங்களை எப்படி நோக்கும் என்பதையும் அவர்கள் சிந்திக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ச கிறீஸ் பூதம் என்று தமிழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தினார். வெள்ளை வான் மூலம் அச்சுறுத்தினார். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வீடுகளுக்குள் புக முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருந்தார். அவருடைய காலத்தில் நாம் அளவெட்டியில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ஒலிவாங்கியைப் பிடிங்கி அடித்தார்கள். இவ்வாறுதான் இருந்தது கோட்டாபயவின் காலம் இருந்தது.

எமக்குப் பக்க பலம் இல்லாதபோதும், இராஜதந்திர முறையூடாக முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கின்றோம். சர்வதேச நாடுகள் முழுமையாக எம்முடன் நிற்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த நாடுகளுக்கும் வரைமுறைகள் உள்ளன. அவற்றைத் தாண்டி அந்த நாடுகள் செயற்பட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுதான் இன்றைய நிலைமை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையைப் படியுங்கள். அப்போதுதான் ஏன் நாங்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க வேண்டும் என்பது உங்களுக்குப் புரியும்.

நாம் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும். கெட்டவரை ஒதுக்குங்கள். தற்போதுள்ள நிலமையைக் காப்பற்றிக் கொள்ள வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்தால் தமிழ் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டும். அதைத் தவிர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க வேண்டும்” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொருளாளர் கனகசபாபதி, வலிகாமம் மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் நடனேந்திரன், வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் ஜெபநேசன், வட்டுக்கோட்டைத் தொகுதியின் இளைஞர் அணித் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டுக்கோட்டைத் தொகுதிப் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்