சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழுவின் பிரதிநிதிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான மார்பல் இசபல் என்பவரே இச்சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கை செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பாளரினால் கேட்டறிந்து கொள்ளப்பட்டது. இச்சந்திப்பு தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவிக்கையில் –

காலத்திற்குத் தேவையான சந்திப்பு, மிகவும் வெளிப்படைத் தன்மையாகப் பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம். குறிப்பாகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் இதன்போது விசேடமாகத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நேரங்களிலும் வாக்குச் சாவடிகளுக்கு அருகாமையில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடும் அதனைத் தடுக்கும் வகையிலாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அப்போது தான் நீதியான, சுதந்திரமான தேர்தல் இடம்பெறும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இத் தேர்தல் குறித்து மக்கள் மிகவும் தெளிவுடனும், ஆர்வத்துடனும் இருக்கின்றார்கள். எமது ஆதரவுள்ள வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளார்கள் என்கின்ற பல்வேறு விடயங்களும் என்னால் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்