குற்றங்களுடன் தொடர்புள்ள அனைவருக்கும் தண்டனை! – அநுரகுமார திட்டவட்டம்

உயிர்த்த தினத் ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் எமது ஆட்சியில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும்” என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாணந்துறையில் நேற்று நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தங்களின் இனங்களுக்குள் தலைதூக்கும் அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பும் அந்தந்த மக்களிடம்தான் காணப்படுகின்றது. அவ்வாறு மட்டுமே அடிப்படைவாதத்தை தோற்கடிக்க முடியும். அதைவிடுத்து இராணுவத்தினரால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. இது ஒன்றும் போர் கிடையாது. போர் மீண்டும் ஏற்படவும் நாம் தலைத்தூக்க இடமளிக்க மாட்டோம்.

எமது நிர்வாகத்தின் கீழ் பொலிஸாரை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏப்ரல் 21 ஆம் திகதி எமது நாட்டில் பெரிய தொரு சம்பவமொன்று இடம்பெற்றது. இது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் மோசமானதொரு சம்பவமாகவே வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

குறிப்பாக கத்தோலிக்க மக்களின் முக்கியமான திருநாளில், அந்த மக்கள் தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடும்போதுதான் இந்த மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதில் 250க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். இந்தச் சம்பவம் இன்றுவரை மக்களிடம் ஒரு அச்ச உணர்வையே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு சம்பவத்தை தடுக்காதவர்கள் மற்றும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என அனைவருக்கும் எமது ஆட்சியில் நிச்சயமாக தண்டனைக் கிடைக்கும் என்பதை நான் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்