தமிழ் பிரதிநிதிகளும் தமிழர்களை ஏமாற்றினார்கள் – பசில் ராஜபக்ஷ!

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விடயத்தில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாம் என்றும் சொல்வதை நிச்சயமாக செய்து முடிப்பவர்கள். கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதனை நாம் நிச்சயமாக நடைமுறைப்படுத்துவோம். எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயமாக மக்களின் ஆதரவுடன் 16 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்.

அப்படியானால், இங்கு இன, மத பேதங்கள் கடந்து அனைவருக்கும் சமமான சேவையை அவர் மேற்கொள்வார் என்பதை இவ்வேளையில் நாம் உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்.

எந்தவொரு இனத்தையும், மதத்தையும் சார்ந்து அவர் ஒருபோதும் செயற்பட மாட்டார் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இனங்களுக்கிடையிலான ஐக்கியமும், ஒற்றுமையும்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையாக கருதப்படுகிறது.

இதனை எமது காலத்தில் நிச்சயமாக மேற்கொள்வோம். 2015ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. இந்த அரசாங்கத் தரப்பினர் அன்று கூறிய பொய்யான வாக்குறுகளை வழங்கியே இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டார்கள்.

தமிழ் பிரதிநிதிகளும் தமிழர்களை ஏமாற்றினார்கள். இதனை இன்று அனைவரும் உணர்ந்துள்ளார்கள். குப்பை மேடு சரிந்து விழுந்து எமது நாட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். இது உலகிலேயே முதன் முறையாகும்.

அத்தோடு, குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மதஸ்தலங்களுக்கு செல்லக்கூட அச்சமான சூழலை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்கவே நாம் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் ஒரு அரசாங்கத்தை உருவாக்க நாம் முயற்சித்து வருகிறோம்.

நாம் வந்தால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் அனைத்தையும் இல்லாது செய்வோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்