புலிகளின் புதிய தலைவராக சொல்லப்பட்ட புலம்பெயர்தமிழர் யாழில் கோதாவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று சொல்லப்பட்ட புலம்பெயர் தமிழர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நாட்டுக்கு வந்து சூறாவளி பிரசாரங்களை மேற்கொண்டார்.

காரைநகரை பூர்வீகமாக கொண்ட இவர் நாட்டில் நிலவிய யுத்த சூழல் காரணமாக 30 வருடங்களுக்கு முன்னர் சுவிற்சலாந்துக்கு புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு இந்து – பௌத்த சங்கம் என்கிற அமைப்பை நடத்தி வருகின்றார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இவரை புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்றும் புலிகளின் பணம் இவரிடம்தான் உள்ளது என்றும் புலிகளின் தலைவரான இவரைத்தான் மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டுக்கு வந்து சந்தித்து பேசினார் என்றும் பாராளுமன்றத்திலும், ஊடக சந்திப்புகளிலும் மங்கள சமரவீர தெரிவித்ததுடன் இவர் மஹிந்தவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஆதாரமாக காண்பித்தார்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஸ உரோம் நகரத்துக்கு வந்தபோது நாட்டின் தலைவர் என்கிற வகையில் அவரை சந்தித்து மரியாதை செலுத்தினாரே அன்றி மங்கள சமரவீர பொறுப்பற்ற விதத்தில் பொய்யான விடயங்களை சொல்லி உள்ளார் என்று லோகேஸ்வரன் பதில் வழங்கியதுடன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் இலங்கைக்கு வந்த இவர் யாழ்ப்பாணத்தில் கோதாவுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரங்களை மேற்கொண்டதுடன் யாழ். ஊடக இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு தமிழ் மக்கள் கோதாபய ராஜபக்ஸவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கோரினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்