ஒரு இனத்தைக் காட்டிக் கொடுத்து உயிர்வாழ்வது மானக்கேடு அதிலும் வி.புலிகள் இயக்கத்திலிருந்து விலகி மாற்றான் காலில் விழுந்து உயிர் வாழ்வது இரட்டை மானக்கேடு

நக்கீரன்

அரசியலில் கருணா ஒரு செல்லாக்காசு. கருணாபற்றி எழுதுவது, எதிர்வினை ஆற்றுவது நேர மினக்கேடு. வேலை மினக்கேடு.

நுளம்பு சின்னப் பூச்சிதான். ஆனால் அது கடித்தால் நோய் வருகிறது. எனவே அது சின்னப் பூச்சி என்று விட்டு விட முடியாது. விட்டால் டெங்கு நோய் வரும். மக்கள் சாவார்கள். எனவே அதனை ஒழிக்க வேண்டும். கருணாவும் அப்படித்தான். 1983 தொடக்கம் இயக்கத்தில் இருந்தவர்.

போராட்டத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுத்த கருணா ஒரு எட்டப்பன். காக்கை வன்னியன். யூதாஸ். அவர் மீது சிறார்களைப் படையில் சேர்த்தது, கப்பம் வாங்கியது, கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டது, பாலியல் முறைகேடுகள், ஆட்களைக் கடத்தியது, நிதி மோசடி  போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இருந்தன. (https://www.colombotelegraph.com/index.php/hon-karuna-amman-the-one-even-above-the-god/)

தலைவர் பிரபாகரனை நான் ஒருபோதும் குற்றம் சாட்டமாட்டேன் என்று சொன்னது சரியானால் பின் ஏன் வி.புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேறினார்?

போரில் உயிரழிவு ஏற்படுகிறது எனவே பிரபாகரனிடம் அதனை நிறுத்துமாறு கேட்டேன். நிறுத்தவில்லை. எனவே  கருத்துவேறு பாடு காரணமாக வெளியேறினேன் என்று கருணா சொல்கிறார். சரி. அவரது முடிவை ஒரு வாதத்துக்குச் சரியென்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னர்?

கருணாவுக்குப்  பிரபாகரனைப் பிடிக்கவில்லை, புலிகளைப் பிடிக்கவில்லை,  ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்களை ஏன் பிடிக்கவில்லை? ஏன் யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு என்ற பிரதேசவாதம் பேச வேண்டும்? மட்டக்களப்பில் கடமையாற்றிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர்கள். பொறியியலாளர்கள், அரச ஊழியர்களை 48 மணி நேரத்தில் அங்கிருந்து வெளியேற வேண்டும்  என்று கருணா கட்டளையிட்டார். இது மிகவும் கேவலமில்லையா? கடைந்தெடுத்த முட்டாள்த்தனம் இல்லையா? தமிழர்களது பலமே வட – கிழக்குத் தமிழர்களது ஒற்றுமைதானே? இன்று முஸ்லிம்களின் கையோங்கிவிட்டது என்று ஓலமிடுவது எந்தவிதத்தில் நியாயம்?

இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா ஒதுங்கி இருந்திருக்கலாம். அப்படி இயக்கத்தில் இருந்து வெளியேறிய பல போராளிகள் ஒதுங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை.  பெரும்பாலும் இயக்கத்துக்கும் அதன் தலைவருக்கும் விசுவாசமாகவே இருந்திருக்கிறார்கள்.  இருந்து வருகிறார்கள். ஆனால் கருணா அப்படியில்லை.

கொழும்புக்குத் தப்பி ஓடுமுன்னர் புலிப் போராளிகளைப் பார்த்து ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீட்டுக்குப் போகச் சொன்னார். அந்த ஆயுதங்கள் பின்னர் முஸ்லிம் தீவிரவாதிகளது கைகளில்தான் போய்ச் சேர்ந்தது! தமிழ்ப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த அந்த ஆயுதங்கள்  பயன்படுத்தப்பட்டன.

எதிரியிடம் சரண் அடைந்த பின்னர்,  தன்னோடு ஓடிவந்த  போராளிகளை கூலிக்குச் சிங்களப்  படையில் சேர்த்துப் புலிகளுக்கு எதிராகப் போராட வைத்தார்!  தனது வெளியேற்றத்தால் வி.புலிகளின் இராணுவ பலம் 70 விழுக்காடு குறைந்துவிட்டது என்று மார்தட்டினார்!

2007 இல் பிள்ளையான், ஜெயம் இவர்களோடு சேர்ந்து “சிறப்புப் தாக்குதல் படை” மற்றும் “உளவு தாக்குதல் படை” என  இரண்டு படைகளை கருணா உருவாக்கினார்.

2008 இல் சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்த கருணா அதன் துணைத் தலைவர்களில் ஒருவராக  நியமிக்கப்பட்டார்.

போராட்டத்தைக காட்டிக் கொடுத்ததற்குப் பரிசாக    இராசபக்ச,   கருணாவை தேசியப் பட்டியல் மூலமாக நா.உறுப்பினர் ஆக்கினார். அதனைத் தொடர்ந்து அவர்  ‘தேசிய  ஒருங்கிணைப்புத் துணை அமைச்சர்” ஆக மார்ச் 09, 2009 இல் நியமிக்கப்பட்டார்.

இவர் அரை அமைச்சராக  இருந்த காலத்தில் இவரால் தமிழ்மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு துரும்பைக் கூட போட முடியவில்லை. மகிந்தா கருணாவை  எலும்பைக் கவ்வும்  நாயாகப் பார்த்தாரேயொழிய அவரை அரை அமைச்சராகப் பார்க்கவில்லை!

சம்பூரில் பொதுமக்களுக்குச் சொந்தமான 818 ஏக்கர் காணியை மகிந்தா அபகரித்து அதனைக்  கேட்வே இன்டஸ்றீஸ் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டு கால குத்தகைக்குத் தாரை வார்த்துவிட்டார்.

அப்போது அரைமந்திரியாக இருந்த கருணா சம்பூர் மக்களைப் பார்த்து என்ன சொன்னார்? 818 ஏக்கர் காணியை (387 குடும்பங்கள்)  மகிந்தா Sri Lanka Gateway Industries (Pvt) L   என்ற  ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு யூன் 2012 இல்  கொடுத்துவிட்டார். அதில் ரூபா 4 பில்லியன் முதலீட்டில் ஒரு பாரிய கனரகத் தொழிற்சாலைகள் கட்டப்படப் போகிறது. எனவே அந்தக் காணி உங்களுக்குத் திரும்பி வராது. (காணி திரும்பி வரும் என்று  சொல்லி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  நா.உறுப்பினர்கள் உங்களை ஏமாற்றுகிறது (http://www.colombopage.com/archive_15A/May16_1431756215CH.php )எனத் தெரிவித்தார்.

ஆனால் 2015 இல் நல்லாட்சி அரசு பதவிக்கு வந்தபோது இந்தக் காணி மீட்கப்பட்டு அதன் சொந்தக்காரர்களிடம் (387 ஏதிலிக் குடும்பங்கள்) அதே ஆண்டு ஒப்படைக்கப்பட்டது!

இவர் அரை அமைச்சராக  இருந்த காலத்தில் வடக்கில் புத்த விகாரைகள், போர்வெற்றி நினைவாலயங்கள், புத்தர் சிலைகள் எழுப்பப்பட்டன.

கொழும்பில் போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் கருணா எந்தத் துக்கமோ வெட்கமோ  இல்லாது  கலந்து கொண்டார்!

2007 இல் கோட்டாபய கொடுத்த கள்ளக் கடவைப் புத்தகத்தில் இலண்டன் சென்று அங்கு அவருக்குச் சொந்தமான வீட்டில் தனது மனைவி மக்களுடன் குடியேறத்  திட்டமிட்டார். அவரது பொல்லாத காலம் அவர்  பிடிபட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

அது சரி,  இயக்கதில் இருந்த ஒருவருக்கு இலண்டனில் ஒன்றுக்கு இரண்டு வீடுகள் வாங்கப் பணம் எங்கிருந்து வந்தது? அதுவும் வெளிநாட்டில் வெளிநாட்டு நாணயத்தில்?  அது  இயக்கத்தின் பெயரைச் சொல்லி மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்தானே?

கருணா சொல்கிறார் “இப்படிப்  பழி வாங்கும் வேலைகளை செய்தார்களே தவிர எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை. ஏற்றுக்கொள்ள முடியாத 13 அம்ச கோரிக்கைகளை கொண்டு தமிழீழ பற்றாளர்களாக காட்டி கொண்டு பிழைப்பு நடாத்துவதற்காக கொண்டுவந்த கோரிக்கை தான் அது. அவர்கள் நல்லவர்கள் என்றால் நடுநிலை வகித்து ஒதுங்கியிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கிழக்கில் மாத்திரமல்ல வடக்கில் கூட இருக்காது. இந்த தடவை கிழக்கை விட வடக்கில் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள் அந்தளவிற்கு அங்கு தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்”.

சரி 13 அம்சக் கோரிக்கைகளை சஜித் பிரேமதாசா  நிராகரித்துவிட்டார் (அவர் அப்படிச் செய்யவில்லை அதில் 9 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்) என்று சொல்வது சரியானால் கோட்டாபயவின் நிலைப்பாடு என்ன? கோட்டாபய  அதனை முற்றாக நிராகரித்துவிட்டாரே? அதற்கு அவர் சொன்ன ஒரேயொரு காரணம் அந்தக் கோரிக்கைகள் நாட்டின் இறைமையை கீழறுக்கும் (Undermine) என்பதாகும்.

வட கிழக்கு இணைப்பை அடியோடு  நிராகரித்துவிட்டாரே? காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு ஒருக்காலமும் கொடுக்க மாட்டேன்  என்கிறார்!

சரி கோட்டாபயவை விட்டு விடுவோம். அரசியல்துறை சார்ந்த கேள்விகளை அண்ணன் மகிந்தாவுடன் கேளுங்கள் என்கிறார். சரி. அவரது அண்ணன் மகிந்த இராசபக்ச  புதிய சனநாயக முன்னணி   வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பற்றி   என்ன சொல்கிறார்?

(1) ஐக்கிய தேசிய கட்சி சனாதிபதி வேட்பாளரின் அறிக்கையில் அரசியலமைப்புச்  சீர்திருத்தம் பற்றிய அத்தியாயத்தில், ஒற்றையாட்சி அரசை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. அரசாங்க அதிகாரம் மாகாணங்களுக்கு ‘முடிந்தவரை அதிகபட்சமாக’ வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் இது உள்ளது. இந்த ஆண்டு சனவரியில் பிரதமரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு அரசியலமைப்பைபுப் போல இந்த விதிகள் காணப்படுகின்றன.

(2) ஐதேக அறிக்கையில் மாகாண சபைகளின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் விரிவுபடுத்துவதற்கும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாகாண சபைப்  பிரதிநிதிகளால் ஆன நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவை அமைப்பதற்கும் மாகாண அலகுகள் சுயாதீனமாக நிதி திரட்ட அனுமதிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன. மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களை மாகாண சபைகளின் கீழ் வைப்பதற்கும் அரசியலமைப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கும் வழி வகுக்கிறது. இந்த அரசியலமைப்பு நீதிமன்றம்  மத்திக்கும் மாகாண அலகுகளுக்கும் இடையிலான மோதல்களில் தீர்ப்பளிக்கும். வரைவு அரசியலமைப்பைப் போலவே, ஐதேக சனாதிபதித் தேர்தல் அறிக்கையும் இலங்கையைக்  கிட்டத்தட்ட சுயாதீன மாகாண அலகுகளின் கூட்டமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(3) வரைவு அரசியலமைப்பு இலங்கையைச் சிங்கள மொழியில் ஒரு ‘ஏக்கிய ராஜ்யா’ (‘ekeeya rajya’) என்றும் தமிழில் ஒரு ‘ஓருமித்த நாடு’ (‘orumiththa nadu’) என்றும் விவரிக்க முயல்கிறது, அதே நேரத்தில் குறிப்பிட்ட அரசியலமைப்பு அர்த்தங்களைக் கொண்ட ‘ஒற்றையாட்சி அரசு’ என்ற ஆங்கில சொற்றொடரைப் பயன்படுத்துவதைக்  கவனமாகத் தவிர்த்துள்ளது. ஆகவே ஒரு ஒற்றையாட்சி அரசு என்ற முத்திரை சிங்களத்தில் இருந்திருக்கும் போது தமிழ் மற்றும் ஆங்கில  மொழிகளில் இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இதேபோன்ற வஞ்சகத்தை ஐதேக வெளியிட்ட சனாதிபதி தேர்தல் அறிக்கையிலும் காணலாம்.  எக்கியா ராஜ்ஜியா அல்லது ஒற்றையாட்சி போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும்  சிங்கள மொழியில் ‘மவ்பிமெ ஏக்கீயத்வாயா’ (‘maubime ekeeyathwaya’) என்று ஒரு குறிப்பு உள்ளது.  இது ஆங்கிலத்தில் ‘தாய்நாட்டின் ஒற்றுமை’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (‘மவ்பிமெ  எக்கீயத்வாயா’ என்ற சொற்றொடருக்கு அரசியலமைப்பில் மதிப்பு இல்லை.  ஆனால் அந்த அறிக்கை ஒற்றை ஆட்சி அரசை நிலைநிறுத்த முற்படுகிறது என்று சிங்கள வாசகர்களுக்குத் தவறாக பரிந்துரைக்க இது பயன்படுத்தப்படலாம்.

(4) முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களைத்  தெரிவிக்க வார்த்தைகளுடன் விளையாடும் இத்தகைய மோசமான மற்றும் நேர்மையற்ற முயற்சிகளை அவர் நிராகரித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், ஐதேக அறிக்கையில் சிங்கள உணர்வுகளை உறுதிப்படுத்த பிரதமரின் வரைவு அரசியலமைப்பில் முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட சிங்களச்  சொற்றொடரான ‘ஏக்கியா ராஜ்யா’ (ekeeya rajya’) கூடப் பயன்படுத்த (தேர்தல் அறிக்கை)  மறுத்துவிட்டது. ஐதேக யின் தேர்தல் அறிக்கையில் இணைப்பாட்சி நிலைப்பாட்டைக்  கடினப்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

(5) இந்த நாட்டில் ஒரு இணைப்பாட்சி ஏற்பாடு ஒருபோதும் சரிப்பட்டு வராது, ஏனென்றால் பெரும்பான்மையான தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்றனர். பெரும்பான்மையான முஸ்லிம்கள் கிழக்கிற்கு வெளியே வாழ்கின்றனர். அத்தகைய மக்கள்தொகை வடிவத்தைக் கொண்ட ஒரு நாட்டின் மீது ஒரு இணைப்பாட்சி முறையைத் திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியாளர்கள் கூட ஒருபோதும் ஒற்றையாட்சி அரசை அகற்ற முயற்சிக்கவில்லை. டொனமோர் மற்றும் சோல்பரி ஆணைக் குழுக்கள்  இணைப்பாட்சி முறையை வெளிப்படையாக நிராகரித்தன.

(6) மகா சங்கத்தையும் பொது மக்களையும் ஏமாற்றுவதற்காக நச்சு அரசியலமைப்பு விதிகள் கொண்ட  ஐதேக அறிக்கையை மிகுந்த ஆரவாரத்துடன்  வணக்கத்திற்குரிய மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம்  வழங்கப்பட்டது. ஒற்றையாட்சி அரசை அகற்றுவதற்கும் அதன் இடத்தில் ஒரு இணைப்பாட்சி அரசை உருவாக்குவதற்கும் ஒரு தேர்தல் அறிக்கையில் ஒரு பிரதான அரசியல் கட்சி சேர்த்திருபது இதுவே முதல் முறை ஆகும். எனவே இது மிகவும் தீவிரமாக கவனத்தில்  எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் ஆகும்.
(7) ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களைப் பொருட்படுத்தாமல், மூன்று பவுத்த பீடங்களின் புனித மகாநாயக்க தேரர்களிடம் நான் மிகவும் ஆர்வத்துடன் வேண்டிக் கொள்வது  ஐதேக  வேட்பாளரிடமிருந்து ஒற்றையாட்சி அரசை நிலைநிறுத்துவதற்கும் இணைப்பாட்சி முறையை எதிர்ப்பதற்கும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பிரதமரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவையும்   அதில் உள்ள அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பதற்கும் எழுத்துப்பூர்வமான  உறுதிமொழியை அவரிடமிருந்து பெற வேண்டும்.

Regardless of the contents of the manifesto that has already been released, I earnestly request the Venenerable Mahanayake Theras of the Three Nikayas to obtain from the UNP candidate, a written pledge to uphold the unitary state, to oppose federalism and to oppose all the proposals contained in the draft constitution tabled in Parliament by the Prime Minister earlier this year.

(https://www.colombotelegraph.com/index.php/unp-presidential-candidates-stand-on-the-unitary-state/)

மகிந்த இராசபக்சவின் கட்டுரை  தன்னை ஒரு பெருந்தேசிய சிங்கள – பவுத்தன் ஆகவும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடென்பதை மறுத்து அதற்கப் பதில்  ஒரு இணைப்பாட்சி முறைமைக் கொண்ட நாடொன்றை வஞ்சகமாக மாற்றப்பார்க்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறார். ஐக்கிய தேசிய கட்சி சனாதிபதி வேட்பாளரின் அறிக்கையில் –

(அ)  அரசியலமைப்புச்  சீர்திருத்தம் பற்றிய அத்தியாயத்தில், ஒற்றையாட்சி அரசை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

(ஆ) மாகாண சபைகளின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் விரிவுபடுத்துவதற்கும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாகாண சபைப்  பிரதிநிதிகளால் ஆன நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவை அமைப்பதற்கும் மாகாண அலகுகள் சுயாதீனமாக நிதி திரட்ட அனுமதிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன.

(இ) வரைவு அரசியலமைப்பைப் போலவே, ஐதேக சனாதிபதித் தேர்தல் அறிக்கையும் இலங்கையைக்  கிட்டத்தட்ட சுயாதீன மாகாண அலகுகளின் கூட்டமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(ஈ) இணைப்பாட்சி நிலைப்பாட்டைக்  கடினப்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

(உ) இந்த நாட்டில் ஒரு இணைப்பாட்சி ஏற்பாடு ஒருபோதும் சரிப்பட்டு வராது.  ஏனென்றால் பெரும்பான்மையான தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்றனர்.

(ஊ) ஒற்றையாட்சி அரசை அகற்றுவதற்கும் அதன் இடத்தில் ஒரு இணைப்பாட்சி அரசை உருவாக்குவதற்கும் ஒரு தேர்தல் அறிக்கையில் ஒரு பிரதான அரசியல் கட்சி சேர்த்திருபது இதுவே முதல் முறை ஆகும்.

எனவே ஐதேக  வேட்பாளரிடமிருந்து ஒற்றையாட்சி அரசை நிலைநிறுத்துவதற்கும் இணைப்பாட்சி முறையை எதிர்ப்பதற்கும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பிரதமரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவையும்   அதில் உள்ள அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பதற்கும் எழுத்துப்பூர்வமான  உறுதிமொழியை அவரிடமிருந்து பெற வேண்டும்.

இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையோர் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கிறார்கள் என மகிந்தாவுக்கு சொல்லிக் கொடுத்த புத்திசாலி யார்? 2012 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை/விழுக்காடு  பின்வருமாறு-

இலங்கைத் தமிழர்களது குடித்தொகை

மாகாணம் குடித்தொகை விழுக்காடு
வட க்கு 987692 43.5
கிழக்கு 609584 26.9
எஞ்சிய 7 மாகாணங்கள் 673648 29.6
மொத்தம்  2270924 100.0

எனவே இலங்கைத் தமிழர்களில் 70.4 விழுககாட்டினர் வட – கிழக்கில் வாழ்கின்றார்கள். வெளியில் 29.6 விழுக்காட்டினர் மட்டுமே வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் வேலை நிமித்தமாகவம் போர்க் காலத்தில் பாதுகாப்புக் கருதியும் இடம் பெயர்ந்தவர்கள். மகிந்த இராசபக்ச ஒரு தேசியக் கட்சியின் தலைவர். பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சனாதிபதியாகவும் பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். இருந்தும் துணிந்து  பொய் சொல்கிறார். மலையகத் தமிழர்களை (839504) எடுத்துக் கொண்டாலும் பாதிக்கு மேல் (51.3 விழுக்காடு) வட- கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

ஆங்கில/சிங்கள மொழிப் புலமை இல்லாத கருணா, பிள்ளையான் போன்றவர்களால் இராசபக்ச எழுதிய கட்டுரையை வாசிக்க முடியாது. ஆனால் வியாழேந்திரன், கஜேந்திரகுமார், பிறேமச்சந்திரன் போன்றோருக்கு என்ன நடந்தது?

இவர்கள் தங்களுக்கு  மூக்குப் போனாலும் பருவாயில்லை எதிரிக்கு (ததேகூ) சகுனம் பிழைக்க வேண்டும் என ஓயாது ஒழியாது மாரித் தவக்கை போல் கத்திக் கொண்டு திரிகிறார்கள். இதில் கஜேந்திரகுமார்தான் பரமார்த்த குரு. இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சியை ஒத்துக் கொள்கிறது. ஆனபடியால் அதனை நிராகரிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். அவரைப் பொறுத்தளவில் அரசியல் அவருக்கு ஒரு பொழுது போக்கு.

“12,000 போராளிகளை எனது பொறுப்பில் எடுத்து விடுவித்துள்ளேன்” என மார்தட்டும் கருணா வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள், போராளிகளைச் சுட்டுக் கொன்றது யார்? இராணுவத்திடம் சரணடைந்த 12 அகவை பாலச்சந்திரனைக் சுட்டுக் கொன்றது யார்?

விக்கிலீக்ஸ் இணையதளம்  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய அவர்களே வெள்ளைக் கொடியோடு சரணடைய முயற்சித்த விடுதலைப் புலிகள்  அமைப்பின் தலைவர்களைச் சுட்டுக் கொல்ல கட்டளை பிறப்பித்தார் என இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார் எனக் குறிப்பிடுகிறது. அப்படிப் போர் இரகசியங்களை பொன்சேகா வெளிப்படையாகச் சொன்னால் தூக்கில் போடுவேன் எனக் கோட்டாபய அவரை அச்சுறுத்தியதையும்  அம்பலப்படுத்தியுள்ளது. 

ஊடகவியலாளர்  இசைப்பிரியாவை சுட்டுக் கொன்றது யார்? யாருடைய கட்டளை? பிரபாகரனின் வாரிசுவை உயிரோடு விடுவது ஆபத்து  பாலச்சந்திரனைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றுஆலோசனை சொன்னது யார்? எல்லோரும் கருணா  பக்கம்  கைகாட்டுகிறார்களே? ஏன்?

பெப்ரவரி 03, 2009  அன்று பாதுகாப்பு வலையத்துக்கு வெளியேயுள்ள மருத்துவமனைகள் தாக்கப்பட்டது நியாயமானதே, அவை இராணுவ இலக்குகள் என்று அதிகார வெறியின் உச்சத்தில் இருந்து கோட்டாபய கொக்கரித்தாரா இல்லையா?

12,000 போராளிகளை தனது பொறுப்பில் எடுத்த கருணா  ஏன் சிறையில் இருந்த 250 க்கும் மேலான  அரசியல்  கைதிகளை பொறுப்பில் எடுக்கவில்லை? இவர்களில் பலர் புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போதுதான் கைது செய்யப்பட்டார்கள். இப்போது அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்று சொல்கிற கோட்டாபய ஏன் அப்போது  ஆட்சியில் இருந்த போது அதனைச் செய்யவில்லை?

சிவராம் சொல்லித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவன் தான் என்கிறார் கருணா. இது நல்ல பகிடி. சிவராம், நடேசன், துரைரத்தினம் போன்ற கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள்தான் அதனை உருவாக்கினார்கள்.

யாரது ஆட்சியில்  25 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்? வெள்ளைவான் கடத்தல் யார் ஆட்சியில்? கொழும்பில்  கப்பம் கேட்டு வெள்ளை வானில் கடத்தப் பட்ட 11 தமிழ் இளைஞர்கள் எங்கே? அவர்களை கடற்படைப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பணத்துக்காகக் கடத்திக் கொன்றுவிட்டார்கள் என்று அரசே  இப்போது அது தொடர்பான சந்தேக நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது!

நா.உறுப்பினர்கள் யோசேப் செகராசசிங்கம், இரவிராஜ் இருவரும்  யாருடைய ஆட்சியில் கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? கருணாவின் கூட்டாளி பிள்ளையான் ஏன் சிறையில் 3 ஆண்டுகள் தவம் இருக்கிறார்?

இலங்கையின் தேசியப் பண்ணைத் தமிழில் பாடத்  தடை விதித்தவர் கோட்டாபய. இத்தனைக்கும் தமிழ் இலங்கையின் அரசியலமைப்பில் அரச மொழிகளில் ஒன்று.

மாகாணங்களின் குடித்தொகை விழுக்காடு தேசிய விழுக்காட்டை ஒத்ததாக இருக்க வேண்டும் என்று பச்சை இனவாதம் பேசியவர் கோட்டாபய. அதாவது வட கிழக்கிலும் சிங்களவர் தொகை 75 விழுக்காடாக இருக்க வேண்டுமாம்.

கொழும்பில் விடுதிகளில்  தங்கியிருந்த 250 க்கும் மேற்பட்ட  அப்பாவித் தமிழர்களை விடிகாலையில் கைது செய்து பஸ்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா என அனுப்பி வைத்தவர் கோட்டாபய அல்லவா?

பொதுசன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய  இராசபக்ச போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவர். அவர் பாதுகாப்புச் செயலராக இருந்த காலப் பகுதியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமற்போதல்கள், படுகொலைகள் தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் கோட்டாபயவை குற்றவாழியாகப்  பார்க்கிறார்கள்.

இந்த சிங்கள – பவுத்த  பேரினவாதி கோட்டாபயவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் எனத் தமிழினத்தையும்  அதன் ஆயுதப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த கருணா கூவுகிறார்.

உண்மை என்ன வென்றால் வட கிழக்கு வாக்காளர்களில் 75 விழுக்காடு வாக்காளர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பார்கள்!

முடிவாக எல்லோருக்கும் மன்னிப்பு இருக்கிறது. ஆனால் இனத்தையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து எதிரிகளோடு கைகோர்த்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்