மூன்றில் ஒன்று நடக்கும் சபாநாயகர் அறிவிப்பு!

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரத்துக்குள் இறுதி தீர்மானமெடுப்பதற்கு சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடினர்.
சபாநாயகருடனான சந்திப்பில் பெரும்பான்மையான மக்களின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரது நிலைப்பாடாகக் காணப்பட்டது. அதற்கமைய மூன்று மாற்று நடவடிக்கைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கேற்ப 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தலுக்குச் செல்லுதல் முதலாவது மாற்று நடவடிக்கையாகும்.
இரண்டாவது நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக தேர்தலுக்குச் செல்லுதலாகும்.
பிரதமர் உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள் விருப்புடன் பதவிகளிலிருந்து நீங்கினால், அதனைத் தொடர்ந்து , ஜனாதிபதியால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுதல் மூன்றாவது நடவடிக்கையாகும்.
எனினும் இவ்வாரத்தில் கட்சி தலைவர்களை சந்தித்து அதன் போது இறுதி முடிவினை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் தத்தமது கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதோடு, அந்த தீர்மானத்தை சபாநாயகருக்கு அறிவித்ததன் பின்னர் சபாநாயகர் இறுதி தீர்மானத்தை அறிவிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்