அத்துமீறிய செயற்பாடு – முதல்வர் ஆனல்ட் அதிரடி

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குற்பட்;ட புங்கன்குளம் பகுதியில் (புறூடி வீதிக்கு முன்னால் அமையப் பெற்றுள்ள ஒழுங்கை) நபர் ஒருவர் தனது வீட்டுக் கழிவு நீரை பொது மக்கள் போக்குவரத்திற்கு அன்றாடம் பயன்படுத்திவரும் வீதிக்கு விட்டமையினால் குறித்த வீதியூடாக போக்குவரத்து செய்து வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

மேலும் குறித்த வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் டெங்கு அபாய அறிகுறிகள் காணப்படுவதுடன், வீதியும் பயன்படுத்த முடியாதுள்ளதாக குறித்த பகுதி பொது மக்களால் மாநகரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய மாநகர சுகாதாரப் பிரிவினால் குறித்த வீட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குறித்த விடயம் இன்று மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த விடயத்தை அறிந்த முதல்வர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று விடயங்களை ஆராய்ந்தார். குறித்த விடயம் தொடர்பில் உரிய வீட்டு உரிமையாளருக்கு மாநகர சட்ட விதிமுறைகள் குறித்து முதல்வரால் விளக்கப்பட்டதுடன் உரிய முறையில் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளும் படியும் குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பான பொது மக்களின் முறைப்பாட்டிற்கமைய மேலதிக சட்ட நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் இந் நேரடிக் கள விஜயத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பாளர் ( HQI ), யாழ்ப்பாணம் பொலீஸார், யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர், சுகாதார மேற்பார்வையாளர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்