தமிழ் மக்கள் புறக்கணித்தாலும் நான் அவர்களைப் பாதுகாப்பேன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் என்னைப் புறக்கணித்தாலும் அவர்களின் காவலனாக இருப்பேன். ஏனெனில், நான் இப்போது நாட்டின் தலைவன். மூவின மக்களினதும் தலைவன். நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதே எனது பிரதான கடமை.”

– இவ்வாறு புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நுகேகொடையிலுள்ள தனது வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்து உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன் என்று எண்ணியிருந்த போதிலும் இப்படிப் பெரும் சாதனை படைத்து வெற்றியடைவேன் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் எனது மக்களின் பாசத்தைக் கண்டு நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் என்னைப் புறக்கணித்தாலும் அவர்களின் காவலனாக இருப்பேன். ஏனெனில், நான் இப்போது நாட்டின் தலைவன். சகல இன மக்களினதும் தலைவன். நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதே எனது பிரதான கடமை.

எனவே, இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கான சூழ்நிலையை நான் ஏற்படுத்துவேன்.

ஜனநாயக வழியில் – மக்களின் வாக்குரிமைப் பலத்தால் நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். இதை வெளிநாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து வெளிநாட்டுத் தலைவர்களுடனும் நேரில் பேசுவதற்கு நான் தயராக இருக்கின்றேன். பல வெளிநாட்டுத் தலைவர்கள் எனது வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்