தமிழரின் மனங்களை வெல்லும் வகையில் நாம் செயற்படுவோம் – மஹிந்த தெரிவிப்பு

தமிழ் மக்களின் வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குப் பெருமளவில் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களை நாம் ஒதுக்கிவைக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழும் நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்துவோம். அவர்களின் மனங்களை வெல்லும் வகையில் நாம் செயற்படுவோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

‘ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு சஜித் பிரேமதாஸவுக்கு பெருமளவு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள். எனவே, தங்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் அல்லவா? தங்கள் ஆட்சியில் தமிழர்களை எப்படி நோக்குவீர்கள்?’ என்று மஹிந்த ராஜபக்சவை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலர் கேள்விகளைத் தொடுத்தனர். அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களும் இலங்கையின் பிரஜைகள்தான். அவர்களை வடக்குத் தமிழர் என்றோ அல்லது கிழக்குத் தமிழர் என்றோ அல்லது தெற்குத் தமிழர் என்றோ நாம் வேறுபடுத்திக் காட்ட முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குப் பெருமளவில் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். இதைப் புதிய ஜனாதிபதி கோட்டாபய தனது பதவியேற்பு நிகழ்வில் பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டுள்ளார். தமிழ் மக்களின் வாக்குகள் எமது கட்சிக்குப் பெருமளவில் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களை நாம் ஒதுக்கிவைக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டில் தலைமிர்ந்து வாழும் நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்துவோம். அவர்களின் மனங்களை வெல்லும் வகையில் நாம் செயற்படுவோம்.

எமது புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் மனநிலையை நன்கு அறிந்தவர். அதற்கேற்ற மாதிரி அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பார். சகல இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிப்பதே அவரின் நோக்கம். அதுதான் அனைவரையும் இலங்கையர்கள் என்ற நாமத்துடன் தன்னுடன் கைகோர்த்துச் செயற்பட வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இந்த நாட்டில் நிலவி வந்தது. அதனால் நாடு அபிவிருத்திப் பாதையில் செல்லவில்லை. ஊழல், மோசடிகளே அந்த ஆட்சியில் அரங்கேற்றப்பட்டன. ஆனால், எதற்கெல்லாம் எமது ஆட்சியில் இடமில்லை. நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வோம். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக சீரழிக்கப்பட்ட இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார நெருக்கடியால் தமிழ் மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஐ.தே.க. அரசோ அரசியல் தீர்வைத் தருவோம் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வந்தது.

தமிழ் மக்கள் மட்டுமல்ல நாட்டிலுள்ள மூவின மக்களும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டார்கள். அந்த நிலைமை எமது ஆட்சியில் வராது.

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணையால் எமது கட்சியின் வேட்பாளர் கோட்டாபய புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். அவரின் தலைமையில் நாம் இப்போது ஆட்சியைக் கொண்டு சென்றாலும் பழைய அரசு (ஐ.தே.க. அரசு) நாடாளுமன்றத்துக்குள் ஊளையிடும். எனவே, நாடாளுமன்றத் தேர்தலை உடன் நடத்தினால் மக்களின் ஆணையை அதிலும் எமது கட்சி பெற்றுக்கொண்டு திறம்பட ஆட்சியை நடத்தலாம். சில தினங்களில் இது தொடர்பில் நாம் ஒரு தீர்மானத்துக்கு வருவோம்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்