சிறுபான்மையினரின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும் – மஹிந்தவிடம் பைஸர் கோரிக்கை

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அவர் பெற்றுக்கொடுத்து அதனை பலப்படுத்துவார் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பைஸர் முஸ்தபா வெளியிட்டுள்ள விசேட செய்தியில் மேலும் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசியல் துறைசார்ந்த நிர்வாகத்தில் மிக நீண்ட கால பழுத்த அனுபவங்களைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ்வின் இடைக்கால அரசாங்கம் மிகச் சிறப்பாக இயங்குவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டில் மிகவும் தீர்மானமிக்க முக்கியமான சூழல் ஒன்று, புதிய பிரதமரின் ஆட்சிக்குள் வரவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன், பெரும்பான்மைச் சமூகத்தினது உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப்போன்று, சிறுபான்மைச் சமூகங்களினது உரிமைகளுக்கும் அவர்களது அபிலாஷகளுக்கும் இயன்றளவிலான பங்களிப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்பதும் எமது பாரிய எதிர்பார்ப்பாகும்.

கடந்துபோன 2005, 2010 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்து அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை எம்மால் மட்டிட முடியாது. அவர் அக்காலகட்டத்தில் அமைதியான, சுதந்திரமான, ஆரோக்கியமான நாடு ஒன்றையே எமக்கு வழங்கியிருந்தார். இதனையும் எம்மால் மறந்துவிட முடியாது. மீண்டும் இலங்கைக்குள் புதிய சமூகம் ஒன்றை அவர் உருவாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். முவ்வின சமூகங்களுக்கு இடையிலும் சமாதானம், செளஜன்யம், சகவாழ்வு மற்றும் நல்லிணக்க உறவுகளைக் கட்டியெழுப்பி, பாதுகாப்பான பலமான வளமான சுபீட்சமான ஐக்கிய இலங்கை ஒன்றைக் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கையும் எம்மிடையே உண்டு.

இந்த நாட்டை நேசிக்கும் மக்களது பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளன. நாட்டு மக்கள் எதிர்பார்த்த சுபீட்சமான எதிர்காலத்தையும், அபிவிருத்திகளையும் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழியையும் இறைவன் எமக்குத் தந்துள்ளான்.

புதிய பிரதமர் ஊடாகக் கிடைத்த இந்த வெற்றியிலே தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாம் அனைவரும் பங்காளிகளாக இருந்து அவரது கரங்களைப் பலப்படுத்த வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்