வறுமை நிலையிலுள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அதிரடி!

முக்கிய நியமனங்களின் போது திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ’13 ஆவது அரசியல் யாப்பிற்கு இணங்க வரையறுக்கப்பட்ட அமைச்சரவை எண்ணிக்கைக்கு அமைவாகவே அமைச்சர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

15 அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டார்கள். இந்த நியமனங்களையும் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே செய்யவேண்டி இருந்தது. இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூய்மையான அரச நிர்வாகத்தை முன்னிலைப்படுத்திய விடயங்களுக்கு மக்கள் ஆணையை கோரி இருந்தோம். மக்களும் அதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.

தற்பொழுது இடைக்கால அரசாங்கத்துக்கான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. விசேடமாக நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபன விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்காகவே இடைக்கால அரசாங்கத்தில் 15 பேரைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நாம் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர்கள் அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக பொதுத் தேர்தலை நாம் நடத்த வேண்டும். அந்த தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறவெண்டும். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.

பொது மக்கள் எதிர்பார்க்கும் யுகத்திற்கு நாம் நாட்டை முன்னெடுக்க வேண்டும். அந்த யுகத்தை நோக்கி பயணிப்பதற்கு நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும்.

இதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம். ஜனாதிபதி இன்றைய அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை செய்வதற்கு அமைச்சர்கள் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். சமீப காலத்தில் இருந்த இராஜாங்க அமைச்சர்கள் முறையாக செயற்படுவதற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததையும் நாம் கேட்கக்கூடியதாக இருந்தது.

இராஜாங்க அமைச்சர்கள் கடந்த காலங்களில் தமது கையெழுத்துக்களை இடும் பயிற்சியில் ஈடுபடவே இடமளிக்கப்பட்டிருந்தது. இராஜாங்க அமைச்சர்கள் செயற்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை அமைச்சர்கள் வழங்க வேண்டும்.

அதே போன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் முன்வைத்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முழுமையாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

நியாதிக்க சபை, கூட்டுத்தாபனம் என்பன நட்டத்தில் செயற்படுகின்றன. இவை இலாபம் மிக்க நிறுவனங்களாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இவற்றிற்கு தலைவர்களை நியமிக்கும் போது திறமை, தொழில் அனுபவங்களில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். அத்தகையோரை நியமிப்பதன் மூலமே இவற்றை இலாபம் மிக்கதாக முன்னெடுக்க முடியும்.

இந்த நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக தெரிவுக்குழு மூலம் நாம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

அமைச்சுக்களுக்கு உட்பட்ட கூட்டுத்தாபனம், நியாதிக்க சபைகளுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக அமைச்சர்கள் பொருத்தமானவர்களின் பெயர் விபரங்களை இந்த தெரிவுக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அமைச்சுக்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைச்சர்கள் தமது பிரதேசத்தை சேர்ந்தவர்களை நியமிப்பது வழமையாக இருந்து வருகின்றது.

தமது பிரதேசத்தில் வறுமைக்குடும்பங்களில் உள்ள திறமை மிக்கவர்களுக்கு இதில் முக்கிய இடம் வழங்கப்படவேணடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்