புகழ்பெற்ற மூத்த ஊடகவியலாளர் கதிர்காமதம்பி வாமதேவன் காலமானார்!

மட்டக்களப்பின் பத்திரிகைத் துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் காலமானார்.

இவர், நேற்று (வியாழக்கிழமை) 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.

கதிர்காமதம்பி வாமதேவன் 1980ஆம் ஆண்டு வீரகேசரி, சூடாமணி, தினபதி ஆகிய பத்திரிகைகளில் ஊடகப் பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்லடி நொச்சிமுனையில் 1950ஆம் ஆண்டு டிசர்பர் 2ஆம் திகதி பிறந்த இவர் செங்கலடி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரான இந்துமதியின் கணவராவார்.

சமூக சேவகரான இவர், ஏறாவூர் வீரகேசரிக்கான மூத்த ஊடகவியவலாளராக செயற்பட்டிருந்தார். அவ்வேளை முதல் முதலில் மறைந்த அகமது லெப்பை மாஸ்டர் என்பவரிடம் இருந்து பத்திரிகைக்கு செய்தி எழுதும் பயிற்சியை பெற்றுக்கொண்டு முதன்முதலில் அக்காலத்தில் வெளியான சுதந்திரன் பத்திரிகையின் செங்கலடி நிருபராக சேவையாற்றி வந்தார்.

இளமைக்காலத்தில் இவரது சிறந்த செய்தி சேவையினால் எம்.ரீ.குணசேகர நிறுவனத்தின் தமிழ் வெளியிட்டு பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எஸ்.ரீ.சிவநாயகத்தின் வழிகாட்டுதலிலே ஊடகவியலாளருக்கான பயிற்சியை பெற்று தினபதி, சிந்தாமணி ஆகிய இரு பத்திரிகைக்கும் செங்கலடி நிருபராக செயற்பட்டவர்.

இவ்வேளை சிந்தாமணி பத்திரிகையிலே வாரம் ஒரு தடவை வெளிவந்த அத்தாணி மண்டபம் பகுதியிலும் தனது எழுத்து திறமையினை வெளிக்காட்டி தனியிடம் பிடித்துள்ளார்.

பத்திரிகைத் துறையிலே தனக்கென தனியிடத்தினை பதித்திருந்த கலாபூசணம் வாமதேவன் அக்காலத்தில் வெளியான ஈழநாதம், தினமுரசு போன்ற பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக பணியாற்றிய பெருமை இவருக்குண்டு. வீரகேசரி பத்திகையிலும் இவர் சேவையாற்றியுள்ளார்.

சித்தாண்டி நிருபராக, செய்தியாளராக செயற்பட்ட காலப்பகுதியிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சைவத்திருத்தலங்களின் கொடியேற்ற திருவிழா ஆரம்ப காலப்பகுதியில் சிறப்புக்கட்டுரைகளை தவறாது வீரகேசரியில் வெளியிட்டு வந்த பெருமை இவரைச்சாரும்.

அதுமாத்திரமன்றி பல்வேறு அமைப்புக்களிலும் பல்வேறு பதவிகளை வகித்த இவர் விருதுகள், சான்றுதல்கள், கௌரவிப்புக்கள் என பல பராட்டுக்களை தனது சேவைக்காக பெற்றுக்கொண்ட ஒரு சிறந்த பத்திரிகையாளராக மாவட்டத்தில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பணியினை பாராட்டி 2015ஆம் ஆண்டு இந்து சமய கலாசார திணைக்களத்தினால் இவருக்கு கலாபூசணம் விருது வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்