கல்வித் துறையை மேம்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியம் – புதிய கல்வி அமைச்சர்

கல்வித்துறையை வலுப்படுத்த வேண்டியது பிரதானமாகும் என புதிய கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் கல்வித் துறையை வலுப்படுத்துவது பிரதானமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், கல்வி அமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய பாதுகாப்புக்கு அடுத்ததாக கல்விக்கே அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அவர் நிறக்கண்ணாடி அணிந்து அரசியல் நிறங்களுக்கு ஏற்றாற்போல் தமது திட்டங்களை ஒரு போதும் முன்னெடுப்பவர் அல்லர். ஆகவே அவரது திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சி, இன, மத பேதமின்றி அனைவருடனும் இணைந்து சேவையாற்றுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரச சேவையாளர்களின் நிதியினைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதையும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தன்னுடைய உருவப்படங்கள் பொறித்த பதாதைகளை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறும் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்