“13 ஆவது திருத்தத்தின் சில விடயங்களுக்கு மாற்றுவழி தேட வேண்டும்… முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது..”

13 ஆவது திருத்தத்தின் சில விடயங்களுக்கு மாற்றுவழி தேட வேண்டும் எனவும் அதில் உள்ள சில விடயங்களை தவிர, அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அந்நாட்டு ஊடகமான தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் அல்லது தமிழ் பெரும்பான்மை பகுதிகளுக்கான உரிமைகள் தொடர்பான 13 வது திருத்தம் குறித்து உறுதியளிக்க முடியுமா என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்க்கு பதிலித்த ஜனாதிபதி, “13 வது திருத்தம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும், இதை செயற்படுத்த முடியாது, குறிப்பாக பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற சில பகுதிகளைத் தவிர, அதை நாங்கள் செயற்படுத்த முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கடந்த வார விஜயத்திற்கு பின்னர், இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பாக உங்கள் எதிர்வினை என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “எனது அணுகுமுறை, நான் வெளியுறவு அமைச்சரிடம் கூறியது போல், தமிழர்களுக்கு வளர்ச்சியையும், சிறந்த வாழ்க்கையையும் கொடுப்பது மிகவும் முக்கியமானது.

சுதந்திரங்கள் மற்றும் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அரசியலமைப்பில் ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனால் தொழில்வாய்ப்பு மூலமாகவும், மீன்வளம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் அங்குள்ள மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அரசியல் பிரச்சினைகளை நாம் விவாதிக்க முடியும். ஆனால் 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு விஷயத்தை உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை.

பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.

தமிழர் பகுதியை அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது வேலை கொடுக்க வேண்டாம் என எந்த சிங்களரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி குறித்த எனது வேலைகளை பார்க்கலாம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்