வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்