யாழில் தொடர்சியாக வீசப்படும் மருத்து கழிவுகள் : அசௌகர்யத்தை எதிர்நோக்கும் மக்கள்!

யாழில் நன்னீர் குளம் ஒன்றினுள் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளமைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளத்தினுள்லையே குறித்த மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளன.

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு தாக்கம் காரணமாக டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு குறித்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தன்னார்வாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது மருத்துவ கழிவுகள் அடங்கிய பைகள் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதனுள் பாவித்த ஊசிகள், மருந்து போத்தல்கள் என்பன காணப்பட்டுள்ளன. அவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக நிலத்தடி நீர் மாசடைந்து அருகில் உள்ள குடியிருப்பாளர்களின் வீட்டு கிணற்று நீரும் மாசடையும் ஆபத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால் குறித்த பகுதியில் குப்பைகள், கழிவு பொருட்களை வீசுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தற்போது மழை காலமாக உள்ளமையால் அப்பகுதியில் வீசப்படும் கழிவு பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தாம் கடுமையான சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அப்பகுதியினர் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்