வடமாகாண ஆளுநராக ஊடக ஜாம்பவான் வித்தி?

வடக்கு மாகாண ஆளுநராக ஊடக ஜாம்பவானும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் காலைக்கதிர் நாளிதழின் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் நியமிக்கப்படலாம் என கொழும்பை மையப்படுத்திய அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று புதிய ஆளுநர்களை 9 மாகாணங்களுக்கும் நியமித்து வருகின்றார். இவற்றுள் 6 மாகாணம் ஏற்கனவே நியமிக்கப்பட்டுவிட்டன. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பது இழுபறியில் இருந்தது. ஆயினும், நேற்று கிழக்கு மாகாணத்துக்கு தொழிலதிபர் அனுராதா யஹம்பத்தும், வடமத்திய மாகாணத்துக்கு பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் நியமிக்கப்பட்டனர். வடக்கு மாகாணத்துக்கு மட்டும் இதுவரை ஆளுநர் எவரும் நியமிக்கப்படவில்லை.

வடக்கு மாகாண ஆளுநருக்கு பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. பிரபல துடுப்பாட்ட சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன், உச்சநீதிமன்றத்தின் முன்ளாள் தலைமை நீதி அரசர் கே.சிறீபவன், வடக்கு மாகாண முன்னாள் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க, வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இதேவேளை, ஆளுநர்களை நியமிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அத்துடன் அவர் உங்களுக்கு தமிழ் ஆளுநர் வேண்டுமா? அல்லது சிங்கள ஆளுநர் வேண்டுமா? என்றும் வினாவியுள்ளார். மஹிந்தவின் கேள்விக்குப் பதிலளித்த கூட்டமைப்பு உறுப்பினர், எமக்கு தமிழ் சிங்களம் என்பது பிரச்சினையல்ல. மக்களுக்கு சேவையாற்றும் மனப்பான்மையுள்ள ஒருவர் தேவை. இராணுவத்தை நியமிக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார் என கூட்டமைப்பின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடக ஜாம்பவான் வித்தியாதரனின் பெயரை கூட்டமைப்பினரின் முன் நிறுத்தியபோது அவர்களும் அதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என கூட்டமைப்பின் உள்வீட்டுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதேநேரம், நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வடக்கு ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்கத் தான் தயார் என கோட்டாபய தெரிவித்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, பெரும்பாலும் இன்று வடக்குக்கான ஆளுநர் இழுபறிக்கு முடிவு கட்டப்படும். அது பெரும்பாலும் ஊடக ஜாம்பவான் வித்தியாதரனாகத்தான் இருக்கும் என்று கொழும்பை மையப்படுத்திய அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்