பொதுத்தேர்தல் காரணமாக இழப்பை சந்திக்கும் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28 ஆகிய திகதிகளில் ஏதாவது தினமொன்றில் நடத்துவதற்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவ்வாறு பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 69 பேர் தமது ஓய்வூதியத்தை பெற முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானோருக்கே இந்த நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சடுதியாக நாடாளுமன்றத்தைக் கலைத்திருந்த சந்தர்ப்பத்திலும் இவ்விவகாரம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்து.

எனினும், நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அந்த விடயம் அமைதியாகியது. இந்நிலையில், தற்போது அந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கமைய 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான புதியவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 45 பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 17 பேரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 பேரும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 45 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடுமென தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்