ராஜபக்ச அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக சபையில் குரல் கொடுப்பேன் – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவுள்ள சஜித் விளாசல்

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் நான் பெயருக்கு இருக்கமாட்டேன். ராஜபக்ச அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் சபையில் குரல் கொடுத்தே தீருவேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகோபித்த தீர்மானத்துக்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித்  பிரேமதாஸவின் பெயரை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிக்கவுள்ளார். இந்தநிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத் குழுவால் நான்  எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். சபாநாயகரும் இந்தத் தீர்மானத்தை ஏற்றுள்ளார். இது தொடர்பில் நான் பெருமகிழ்வு அடைகின்றேன்.

எனக்கான எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமன அறிவிப்பை எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி சபையில் சபாநாயகர் அறிவித்தவுடன் அன்றிலிருந்து எனது கடமைகளைத் திறம்படச் செய்வேன்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி நாடாளுமன்றத்தில் முக்கிய பதவி. ஜனநாயக விழுமியங்களுக்கு மாறாக அரசு செயற்பட்டால் அல்லது கொள்கையின் வழி தவறிச் செயற்பட்டால்  அதனைத் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சித் தலைவரின் பிரதான கடமை.

ஊழல், மோசடிகளற்ற – கொலை, கொள்ளைகளற்ற நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம். இந்த விருப்பத்துக்கு மாறாக ராஜபக்ச அரசு செயற்பட்டால் அது கவிழ்வது உறுதி” – என்றார்.
…………………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்