பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை – சவேந்திர சில்வா

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இலங்கைக்கு இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து இந்த விடயம் தொடர்பான தீர்மானங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.

அதற்கான நிதி சேகரிப்பதற்கு எந்தவித தேவைப்பாடுகளும் இல்லை. ஏனெனில் இதனை வெளிவிவகார அமைச்சு முன்னின்று செயற்படுத்தி வருகின்றது.

அதேநேரம் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

அதற்கு முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பையும் பெற்று நடைமுறைப்படுத்துவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தபோதும் இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டார்

எனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதன்படி அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்