ஐ.தே.க. இன் தலைவராக சஜித்தை நியமிப்பது குறித்த பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

களுத்துரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வொன்று கிடைத்தமையானது, உண்மையில் மகிழ்ச்சியானதொரு விடயமாகும்.

இந்தப் பிரச்சினை தற்போது முடிந்துவிட்டது. இதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைத் தொடர்பாகவும் சுமூகத் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்பதுதான் எம் அனைவரது விருப்பமாக இருக்கிறது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெளியேறாத வகையில் இந்தத் தீர்மானம் அமைய வேண்டும். கட்சியிலுள்ள அனைவரையும் அரவணைத்துத்தான் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்.

அந்தவகையில், சஜித் பிரேமதாசவை தலைவராக்கும் நடவடிக்கை அடுத்தவாரம் முதல் இடம்பெறும் என்று நாம் கருதுகிறோம்.

25 வருடங்களுக்குப் பின்னர்தான் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது. இதனைத்தான் பலரும் இன்று விரும்புகிறார்கள். நாளை திங்கட்கிழமையிலிருந்து இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். இந்த செயற்பாட்டில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்