சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊழியர்கள் மீது தாக்குதல் – இருவர் கைது

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர் தாதியா்கள், ஊழியா்களை தாக்கி தளபாடங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் சந்தேகநபர்களை பொலிஸாாிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின்னர் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது அவ்விளைஞர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை என்று வைத்தியசாலை பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதுடன், வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். எனினும் அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் அவ்விருவரையும் மடக்கி பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இருந்தபோதும் ஒருவர் கைவிலங்கோடு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். எனினும் இளைஞர்கள் மீண்டும் குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு முன்னரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்