சிறிதரனும் கோட்டாவுக்குக் கடிதம்!

“கனியவளங்களைக் கொண்டு செல்வதற்காக இதுவரை காலமும் இருந்து வந்த அனுமதியை கோட்டாபய தலைமையிலான அரசு இரத்துச் செய்தமையால் தமிழர் தாயகப்பகுதிகளில், வகை தொகையின்றி மணல் அகழ்வு இடம்பெற்று, மக்கள் இடம்பெயரும் செயற்கைச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர்.அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கல், மண் மற்றும் மணல் ஏற்றுவதற்கான அனுமதியை இரத்துச் செய்வதாக கடந்த 2019.12.03 ஆம் திகதி தங்களால் வெளியிடப்பட்ட அறிவுப்புக்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் மிகமோசமான வகையில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

மணல் அகழப்படும் இடங்களில் இயற்கைக்கு பாதிப்பற்ற வகையில் புவிச்சரிதவியல் திணைக்களம், அரச அதிபர், பிரதேச செயலாளர், பிரதேசசபை, சுற்றுச்சூழல் திணைக்களம், தொல்பொருட் திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் அனுமதிகளை முறைப்படி பெற்ற பின்னரே அரச மற்றும் தனியார் காணிகளில் நிலமட்டத்திற்கு மேலுள்ள மணலை அகழ முடியுமென்பது சட்டத்தினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் நிலத்திற்கு 15 அடிக்கு கீழுள்ள மணல் அதிகளவில் அகழப்பட்டதால் நன்னீர்ப் பிரதேசங்கள் உவர் நிலங்களாக மாற்றம் பெற்று அப்பகுதிகளில் மக்கள் குடியேறி வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாலி, கௌதாரிமுனை உள்ளிட்ட பகுதி மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ முடியாது உள்நாட்டிற்குள்ளேயே இடமபெயர்ந்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு, பன்னங்கண்டி, வன்னேரிக்குளம், திருவையாறு, கண்டாவளை போன்ற பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை, அளம்பில் போன்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் இயற்கை மரங்கள் அழிக்கப்பட்டு மனித இனம் குடியேறி வாழ முடியாத அளவுக்கு அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இன்னும் சில வருடங்களில் எந்த வளங்களுமற்ற அனாதைகளாக மாற்று இடங்களில் குடியேறி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஏழு தசாப்த கால போரும், சமாதானமும் எமது மக்களுக்கான நிரந்தர அமைதியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதும், இந்த நாட்டின் அதிகார பீடங்களில் இருந்தவர்கள் அதற்கு முன்வரவில்லை என்பதும் வரலாறு தந்த துயரங்கள். இந்நிலையில் தற்போது துப்பாக்கிகளும், குண்டுகளும், வன்முறையும் இல்லாத போதும் கூட எமது மக்கள் சொந்த நிலங்களிலிருந்து தாமாகவே இடம்பெயர வேண்டிய செயற்கைச் சூழலை உருவாக்குவதற்கு தங்களின் 2019.12.03ஆம் திகதிய அறிவிப்பு அடித்தளம் இட்டிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு நீட்சியின் அடுத்த கட்டமாக அவர்களது பொருளாதாரம் மற்றும் இருப்பு என்பன மடிவலையூடாக கடல்வளமும், மணல் அகழ்வு ஊடாக இயற்கை வளமும் அழிக்கப்படுவதனூடாக வடக்கு, கிழக்கு மக்களின் இயல்பு வாழ்வையே கேள்விக்கு உட்படுத்துகிறது.

எனவே, தயவுசெய்து, இந்த நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள தாங்கள் இவ்விடயத்தில் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை தங்களுக்கு அனுப்பிவைக்கின்றேன்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்