ஒற்றுமை குந்தகக் காரரை மக்கள் அறிவர்; தேர்தலில் அவர்கள் தெளிவாக பதிலிறுப்பர்!

மக்கள் நிராகரித்தவருக்கு எவ்வாறு
ஆசனமளிப்பது என்கிறார் சுமந்திரன்

ஒற்றுமைக்காக அனைவரையும் நாங்கள் அழைத்துள்ளோம். அந்த ஒற்றுமையை விரும்பாமல் இருக்கின்ற எவரையும் கட்டாயப்படுத்தி கொண்டு வர முடியது. ஆகவே ஒற்றுமைக்கு யார் குந்தகம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாற்று அணிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் மாற்று அணியினர் வெளிப்படுத்தியுள்ள தமது நிலைப்பாடுகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

எங்களது அத்தகைய அழைப்பை அவர்கள் நிராகரிப்பதற்கான பூரண சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஏன் இந்தக் கால கட்டத்தில் ஒரு மாற்று அணி உருவாகக் கூடாது என்பதற்கான காரணங்களையும் நான் சொல்லியிருக்கிறேன். அந்தக் காரணங்களை மக்களும் அறிவார்கள்.

ஆகையினாலே இவர்கள் இணங்கி வரமாட்டோம் மாற்று அணியொன்றை உருவாக்கத் தான் போகின்றோம் என்று உறுதியாக நின்றாலும் கூட அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மக்கள் ஆதரவை கொடுக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

மக்களுடைய சிந்தனை எந்த வேளையிலும் தெளிவாக இருக்கும். இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் ஒரே அணியில் நிற்பது தான் அத்தியாவசியம் என்பதை மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒரு வடிவமும் கொடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

ஒருதரையும் கட்டாயப்படுத்தி கூட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியாது. தாங்கள் தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டுமென்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனபடியினாலே அவர்கள் அதனை நிராகரிப்பதற்கு புரண அதிகாரம் இருக்கிறது. மக்கள் அதனைப் பார்த்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். யார் சரியாக உண்மையாகவே ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கின்றார்கள் என்ற விடயங்களை மக்கள் ஆராய்ந்த சிந்திக்க வேண்டும்.

ஒரு கட்டுரையொன்று வந்ததிருந்தது ஒற்றுமைக்கு நாங்கள் தான் குந்தகம் விளைவிக்கிறோம் என்ற பாணியிலே இருந்தது. அந்தக் கட்டுரையிலே இருக்கிற எல்லா விடயங்களையும் ஒழுங்காக வாசித்துப் பார்த்தால் தேர்தலிலே தோற்றவர்களுக்கு நாங்கள் ஆசனங்களை கெர்டுக்கவில்லை. அதனால் தான் அவர்கள் விட்டுப் போனார்கள் என்று அந்தக் கட்டுரை சொல்கிறது.

அது உண்மை. அப்படி என்று சொன்னால் நாங்களா ஒற்றுமைக்கு பாதகமாக இருந்தோம். தேர்தலிலே தோற்றவருக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்றால் அது ஐனநாயகத்தை மதிக்கின்ற ஒரு செயல். அப்படி ஐனநாயகத்தை மதிக்கின்ற ஒரு செயலைத் தான் நாங்கள் செய்தது குற்றமென்றால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார்.

அந்தப் பத்தி எழுத்தாளர் எல்லா உதாரணங்களையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஆனால் குற்றத்தை எங்கள் மேல் சுமத்துகிறார். ஆனால் அதற்கான காரணம் இது என்று சொல்கிறார். அதாவது தேர்தலில் தோற்றவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாதென்கின்ற ஒரு கருத்து ஐனநாயக விரோத செயல் என்கின்ற கருத்து பரவலாக இருக்கிறது. அப்படியாக ஐனநாயக விரோத செயலை நாங்கள் செய்யவில்லை அதனால் தான் ஒற்றுமைய குலைந்தது என்று அவர் ஒரு கருத்தைச் சொல்கிறார்.

ஆகவே ஒற்றுமைய குலைந்ததற்கான பலவிதமான கருத்தக்கள் இருக்கிறது. நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்திருக்கிறோம் வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம். அழைத்திருக்கிறோம். இல்லை நாங்கள் வரவே மாட்டோம் என்று முரண்டுபிடித்தால் நாங்கள் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே அப்படியானவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதாவது உண்மையிலேயே யார் ஒற்றுமைக்கு குந்தகமாகச் செயற்படுகிறார்கள். இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையிலே அப்படியாக அவர்கள் செய்வதனுடைய பின்விளைவு என்ன என்பதை மக்கள் சரியாகச் சிந்தித்து ஆராய்ந்து தீரமானங்களை எடுக்க வேண்டும். எங்களுடைய ஒற்றுமையைக் குலைத்து அதன் மூலமாக எங்கள் பலத்தைக் குறைக்க நினைக்கிறவர்களை மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்