இந்தியாவைப் பகைத்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் – கோட்டா அரசை எச்சரிக்கின்றார் சம்பந்தன்

“இந்தியாவினுடையதோ அல்லது சர்வதேச சமூகத்தினுடையதோ அறிவுரைகளை – பரிந்துரைகளை கடந்த காலங்களில் மஹிந்த அரசு தட்டிக்கழித்தது. அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுகளை – விபரீதங்களை மஹிந்த அரசும், நாடும் கடந்த காலங்களில் அனுபவித்தது. தற்போது பதவியேற்றுள்ள கோட்டாபய தலைமையிலான அரசும், முன்னைய பாணியில் செயற்பட்டால், இந்தியாவின் பரிந்துரையை – கோரிக்கையை தட்டிக் கழித்தால் விபரீத விளைவுகளைச் சந்திக்கவேண்டிவரும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதனை நாம் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவினதும், சர்வதேச சமூகத்தினதும் கோரிக்கைகளை ராஜபக்ச அரசு கடந்த காலங்களில் கண்டுகொள்ளவில்லை. இதனால் நாடும், ராஜபக்சாக்களும் உரிய விளைவுகளைச் சந்தித்தனர்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக அடிப்படையில் நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்றும், கடந்த கால அனுபவங்களைக் கொண்டும் கோட்டாபயவுக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனாலும், சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகளால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை இந்த நாடு முழுவதுக்குமான தலைவராக ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

அவர் மஹிந்த ராஜபக்சவின் வழியில் செயற்படக்கூடாது. நாட்டின் நல்லிணக்கம் கருதி முன்வைக்கப்படும் பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும் தட்டிக்கழிக்கக் கூடாது. இதைத் தட்டிக் கழித்தால் மிகப் பெரிய விபரீதங்களைத்தான் சந்திக்கவேண்டிவரும்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் விரைவில் சந்திப்போம். இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கக் கோருவோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்