சர்வதேச ஆதரவுடன் சமஷ்டி கிட்டும் – சம்பந்தன் நம்பிக்கை

“தமிழர்களுக்கான அதியுச்ச அதிகாரப் பகிர்வுத் தீர்வான சமஷ்டியைப் பெறுவதற்குப் பல்வேறு படிநிலைகளைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறிருக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீரென அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க இயலாது. சர்வதேச ஆதரவுடன் சமஷ்டியை எப்படியும் பெற்றே தீருவோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

யாழில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் மேற்படி நம்பிக்கை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சமஷ்டியைப் பெறுவதற்கான எமது பயணம் நெடியது. டட்லி முதல் மஹிந்த வரையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் இது தொடர்பில் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். பல படிமுறைகளையும் தாண்டி வந்துள்ளோம். இவையெல்லாம் எழுத்து ரீதியில் பதிவாக உள்ளன.

தற்போதைய ஜனாதிபதியான கோட்டாபயவின் அண்ணன் மஹிந்த 13 இற்கும் அப்பால் சென்று அதிக அதிகாரங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கக்கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு தருவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். அந்த அதிகாரப் பகிர்வு தொடர்பில் சமஷ்டி நடைமுறையில் உள்ள நாடுகளின் நிலமைகளை ஆராய குழுக்களைக்கூட மஹிந்த நியமித்திருந்தார்.

இவ்வாறிருக்கையில் புதிதாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச சமஷ்டியை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது.

கோட்டாபய ஜனாதிபதியான பின்னர் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு தொடர்பில் சர்வதேச கரிசணையும் அழுத்தமும் அதிகரித்துள்ளது. சர்வதேசம் இந்த விவகாரத்தைக் கவனித்துக் கொண்டுள்ளது. இதனால் சர்வதேச ஆதரவுடன் சமஷ்டிக்கான எமது அழுத்தம் தொடரும். தமிழர்களுக்கு சமஷ்டியே தீர்வாக முடியும்” – என்றார்.
…………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்