மீண்டும் தனிச்சிங்களச் சட்டம் – கவலையுறுகிறார் மாவை

“தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாம் எதிர்த்திருந்தோம். அவ்வாறான நிலையே இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா கிளிநொச்சியில் நேற்றுச் சனிக்கிழமை நடைபெற்றபோது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடக் கூடாது என்று தெரிவித்துள்ளமையானது அனைத்து தமிழ் மக்களிடத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் ஒன்றாக அணிதிரள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இது புதிதல்ல. தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாம் எதிர்த்திருந்தோம். அவ்வாறான நிலையே இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசின் காலத்தில் அமைச்சுப் பொறுப்பேற்கும் ஆசையில் அரசுக்கு நாம் ஆதரவு வழங்கவில்லை. பல கோடி நிதியில் அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்தியா, இலங்கை ஜனாதிபதியை அழைத்துப் பேசியது. அவர்களின் பிரதான நோக்கம் சீனாவை இலங்கையில் ஆதிக்கம் செலுத்த விடக் கூடாது என்பதே. அது தவிர்ந்து இலங்கையில் காணப்படும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஆனால், இந்தியாவில் வைத்தே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இனப்பிரச்சினை விடயம் தொடர்பாக மாறுபாடான கருத்தைத் தெரிவித்துவிட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள தேசிய கீதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக  இந்தியாவும் சர்வதேச நாடுகளும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

தற்போது தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைக்கு, எதிர்வரும் நாட்களில் நாம் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்