சுவிஸ் தூதரக அதிகாரி நீதிமன்றில் முன்னிலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர், அதன்பின்னர் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட மருத்துவ நிபுணரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அங்கிருந்த சில அதிகாரிகளினால் அவர் தேசிய மனநல நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் 5 மணிநேரத்தின் பின்னர், அங்கிருந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை முன்வைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்