அழிக்கப்போகின்றனரா தென்மராட்சியை தமிழரசுக் கட்சியினர்?

– காலிங்கன் –

தென்மராட்சிப் பிரதேசத்தில் சாவகச்சேரி தேர்தல் தொகுதி மிக முக்கியமான ஒரு தேர்தல் தொகுதியாகும். மார்ச் 1960 இல் இத்தேர்தல் தொகுதியில் இருந்து கிளிநொச்சி நகரம் பிரிக்கப்பட்டு கிளிநொச்சி தேர்தல் தொகுதியாகப் புதிய தொகுதி அமைக்கப்பட்டது. 1947-1956  ஆம் ஆண்டு காலப்பகுதி வரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸை சேர்ந்த வி. குமாரசுவாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  1949 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியிலும் பின் 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலுமாக 25 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டவர் வி.என்.நவரட்ணம்.

1977 ஆம் ஆண்டு பொதுத் மே 14 ஆம் திகதி தந்தை செல்வாவின் சாணக்கியத்தால் தமிழ் கட்சிகளாகிய தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொண்டு இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதே வேளையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில்,  நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சி ஆகிற்று. முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரபூர்வமாக அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டார்.. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஒரேயொரு பொதுத் தேர்தல் இதுவேயாகும்.

இவற்றால் சுதாகரித்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன, தமது கட்சிக்கு நாடாளுமன்றில் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு, புதிய அரசமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மிகையாக வலுப்படுத்தி நிறைவேற்று அதிகார முறைமையைக் கொண்டுவந்தமையுடன், பொதுத்தேர்தலை தொகுதிவாரியிலிருந்து மாற்றி விகிதாசார முறைமையை உருவாக்கினார். இதனால் சிறுபான்மை மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இது இலங்கையின் அரசியல் வரலாறு.

விகிதாசார முறைமை வந்ததன் பிற்பாடு பரந்து விரிந்த தென்மராட்சி பகுதியை மையப்படுத்தி பொதுத் தேர்தலில் நடராஜா இரவிராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2001, 2004 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று தென்மராட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2001 – 2006 ஆம் ஆண்டுக் காலப்பகுதி வரை – அவரது உயிர் பிரியும்வரை – பதவிவகித்தார். அவர் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் அவருக்கிருந்த மும்மொழிப் புலைமையால் எமது இனம் ஒடுக்கப்படுவதை, எமது போராட்ட வரலாற்றை சர்வதேச அரங்குவரை ஒலிக்கச் செய்தார். ‘ரவிராஜ் அசோசியேட்டஸ்’ என்ற சட்ட நிறுவனத்தை நிறுவி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் எமது உறவுகளுக்காக இலவச சட்ட உதவி வழங்கினார்.

2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் விசையுந்து ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.

தமிழ் அரசியல் பரப்பில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக தேசியத் தலைவரால் மாமனிதர் என்ற கௌரவம் அவருக்கு வழங்கப்பெற்றது. ஆனால், இன்று தமிழ் தேச விரோத செயற்பாட்டாளர்கள் சிலர் தமது அரசியல் சுயலாபத்துக்காக – தமது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக – இரவிராஜின் நினைவுதினத்தை வருடந்தோறும் தவறாமல் கொண்டாடுகின்றார்கள். ஆனால், தேசியத் தலைவரால் அவருக்கு வழங்கப்பட்ட உயர் கௌரவ விருதை அவர்கள் மறந்து விட்டார்கள் போலும். இல்லை மறைத்து விட்டார்கள் போலும். அழைப்பிதழிலோ அல்லது உரைகளிலோ மாமனிதர் என்ற அதியுயர் கௌரவம் தற்போது இரவிராஜின் பெயர்களுக்கு முன்னாள் பாவிக்கப்படுவது அரிதாகிவிட்டது.

நடராஜா இரவிராஜின் மறைவுக்குப் பின்னர் கந்தையா அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட ஒருவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தென்மராட்சி மக்கள் மத்தியில் அவர் அதிபராக இருந்த காலம் முதல் மக்கள் மத்தியிலும் இளைய தலைமுறையினர் மத்தியிலும் உயர் கௌரவத்துக்குரியவராகக் காணப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுமார் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அவர் பெற்று 6 ஆவது இடத்தில் உள்ளார். ஆயினும் தமிழரசுக் கட்சிக்கு 5 ஆசனங்கள் கிடைத்தமையால் அவர் நாடாளுமன்றம் செல்கின்ற வாய்ப்பை இழந்தார். இவரது இந்தத் தேர்தல் முடிவு திட்டமிட்ட ஒரு சூழ்ச்சியின் காரணமாக அமைந்துள்ளது என்றே தென்மராட்சியின் பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அவர் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டார் என்று அவர்கள் பொருமுகின்றார்கள். இதன் விளைவுதான் 2018 நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு என்றும் அரசியல் அவதானிகள் நோக்குகின்றார்கள்.

தமிழரசுக் கட்சியின் கோட்டையாகிய தென்மராட்சியின் சாவகச்சேரி நகர சபையில் என்றுமில்லாதவாறு – எவரும் நினைத்துப்பார்க்காதவாறு – அதிகூடிய வாக்குகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றிருந்தமை வெள்ளிடைமலை. இதற்குக் காரணம், வி.என்.நவரட்ணம், இரவிராஜ் போன்ற தலைவர்கள் தமிழரசை வளர்த்த மண்ணில் தொடர்ந்து அவர்கள் பாதையில் பயணித்த அருந்தவபாலனை ஓரங்கட்டியமையுடன், அந்தத் தொகுதிக்கு சரி வேறு ஒரு சரியான தலைமைத்துவத்தைத் தமிழரசுக் கட்சி வளர்த்தெடுக்க இன்றுவரை தவறியுள்ளது என்றே தென்மராட்சிக்கு அப்பால் உள்ளவர்கள்கூட பேசுகின்றார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை தென்மராட்சியில் பொது அமைப்புக்களையும் வர்த்தகர் சங்கத்தையும் இணைத்து மண் அகழ்வுக்கு எதிரான மாபெரும் போராட்டம் ஒன்றைக் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி மேற்கொண்டிருந்தார்.

இந்தப் போராட்டத்துக்கு அவர் கட்சி பேதமின்றி அழைப்பு விடுத்திருந்தார். தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த அருந்தவபாலன், நகரசபையின் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கலாநிதி அகிலன் தமிழரசுக் கட்சி சார்ந்தவர் என்பதால் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவர் என எண்ணி போராட்டத்தில் பங்குகொள்ளவில்லை. சாவகச்சேரி நகரசபையின் நகரமாதா, உப நகரபிதா போன்றவர்களைத் தவிர எவரும் போராட்டத்தில் பங்குகொள்ளவில்லை. தென்மராட்சி தொகுதியில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கூட பங்குபற்றவில்லை.

பொதுநோக்கோடு, பொது நன்மை கருதி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போராட்டத்துக்கு, தனி ஒருவருக்காக ஒட்டுமொத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்ளாதமை தென்மராட்சி மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மட்டும் போராட்டத்தில்  அது நிறைவடையும்வரை பங்குகொண்டிருந்தார்.

ஆனால், இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டங்களை விட சாவகச்சேரியில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பெருமளவு மக்கள் பங்குகொண்டனர். மக்கள் பிரதிநிதிகள்தான் பங்குகொள்ளவில்லை.

தென்மராட்சி பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தனது பிரதேசத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்குகொள்ளாதமையுடன், தமிழரசு இளைஞர் அணியால்  கச்சாய், கெற்பேலி பகுதிகளில் நடத்தப்பட்ட மண் அகழ்வுக்கான போராட்டத்திலும் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சி அல்ல என்பது அந்தப் போராட்டத்தில் இருந்து புலனாகியது. தனிப்பட்ட அரசியல், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, தனிப்பட்ட சுயநலம் என்பவற்றின்பால் கட்சி நகர்கின்றது.

தொடர்ந்தும் இவ்வாறு தமிழரசுக் கட்சி தென்மராட்சியை ஒதுக்கிச் செயற்படுமானால் மாற்றுத் தலைமை ஒன்று உருவாவதை கடவுளாலும் தடுக்கமுடியாது போகும் அபாய நிலைதான் ஏற்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்