கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி  கோத்தபாய ராஜபக்ச  அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடில்லை என அண்மையில்  தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதி கோரியும், இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?, ஜனாதிபதியே தாங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுகளை கையளித்தோம் அவர்கள் எங்கே? சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து. இரவோடு இரவாக ஓஎம்பி அமைத்து இலங்கை அரசு எதனை சாதிக்கப் போகிறது? கடத்தாதே கடத்தாதே எமது உறவுகளை இனியும் கடத்தாதே, கையளிக்கப்பட்ட சிறுவர்களை எங்கே மறைத்து வைத்திருக்கின்றாய்? சிறுவர் உரிமை சமவாயத்தில் இலங்கைக்கு அங்கீகாரமா? போன்ற கோசங்கள் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் செ.கஜேந்திரன், வடக்கு மாசகாண முன்னால் அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஐங்கரநேசன்,பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள்  உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் பங்கு கொண்டனர்.  ,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்