நாடாளுமன்ற உறுப்பினரின் குறைகேள் அலுவலகம் இல்லாத தென்மராட்சி – கலாநிதி அகிலன்

ஈழத்தமிழர் தாயகமெங்கும் பரந்துவாழும் எம் உறவுகளுக்கு எனதும் எனது அமைப்புகள் சார்ந்தும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் இந்த ஆண்டு எமது தென்மராட்சி மக்களுக்கு சுபிட்சம்மிக்க ஓர் ஆண்டாக அமையட்டும். தென்மராட்சிப் பிரதேசத்தில் 14 வருடங்களுக்கு மேலாக அந்தப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாதமையுடன் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் குறைகேள் அலுவலகமும் இல்லாதமை வேதனைக்குரிய விடயமாகும். இந்த ஆண்டிலும் இனிவரும் ஆண்டுகளிலும் தென்மராட்சி மக்கள் விழிப்புடன் எம்மைச் சுதாகரித்து எமக்குரிய தலைமையை – எமக்காக வாழ்கின்ற தலைமையை – நாமே தெரிவுசெய்ய வேண்டும்.

– இவ்வாறு தனது புத்தாண்டுச் செய்தியுடன் அடங்கிய ஊடக அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்  உலக பசி ஒழிப்பு மன்றத்தின் ஸ்தாபகரும், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் துணைத்தலைவரும் தமிழ் சி.என்.என், இணையம், தாய்வீடு பதிப்பகம், லவ்லி கிறீம் ஹவுஸ் என்பவற்றின் நிர்வாக இயக்குநரும் தென்மராட்சி பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளரும் யாழ்.மாவட்ட உணவக உரிமையாளர் ஒன்றியத்தின் இணைத் தலைவருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-

தென்மராட்சிப் பிரதேசத்தில் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 60 கிராம அலுவர் பிரிவுகளில் 50 ஆயிரத்து 494 வாக்காளர்கள் உள்ளார்கள். அமரத்துவமடைந்த மாமனிதர் நடராஜா இரவிராஜின் மறைவுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் – இன்றுவரை தென்மராட்சி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களின் பிரதேசத்தில் அவர்களோடு கூடவே வாழ்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது. தென்மராட்சி மக்களைக் கிள்ளுக்கீரைகளாக அரசியல் வாதிகள் பயன்படுத்துகின்ற நிலைமையே காணப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தென்மராட்சி மக்கள் தமது வாக்குகளை அளித்து அவர்களை அரியாசனத்தில் ஏற்றினார்கள். ஆனால், தேர்தல் முடிந்ததும் அவர்கள் எவரும் மக்களைத் திரும்பிப் பார்ப்பதே கிடையாது.

படித்த இளைஞர், யுவதிகள் தமது வேலைவாய்ப்புக்காகவோ – அல்லது மக்கள் தமது தேவைகளுக்கு – நாடாளுமன்ற உறுப்பினரின் சிபாரிசை பெறுவதாயின் எங்கு செல்வர்? தமது பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் இல்லை? தெரிவுசெய்யப்பட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நாடாளுமன்ற உறுபினர்களின் முகவர்கள் ஊடாக சிபாரிசு பெறுவதற்கு சிலர் பணம் பெற்றே கையெழுத்து பெற்றுக்கொடுக்கின்றார்கள். இது நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிந்து நடைபெறுகின்றதா அல்லது தெரியாமல் நடைபெறுகின்றதா தெரியாது.

நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துக்குரிய கொடுப்பனவாகிய ஒரு லட்சம் ரூபாவை மாதாமாதம் தவறாமல் பெற்றுக்கொள்ளும் யாழ்.மாவட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தென்மராட்சியில் இதுவரை ஒரு மக்கள் பணிமனையை நிறுவி அவர்களின் குறைகளை அறியவில்லை ஏன் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழ்.மாவட்டத்தில்கூட ஓர் அலுவலகம் கிடையாது. மக்கள் சந்திப்பு நடத்தியதும் கிடையாது.

கடந்த வருடம் ஆட்சியில் இருந்த அரசால் கம்பெரலியா, ரண் மாவத்த, விசேட நிதி ஒதுக்கம் என்று பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெற்றன. சாவகச்சேரி தொகுதிக்கு 300 மில்லியன் ரூபா கம்பெரலியாவின் ஊடாக ஒதுக்கப்பட்டது. எமது பிரதேசத்துக்கே தொடர்பில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது பிரதேச அபிவிருத்தியை மேற்கொண்டார்கள். அவர்கள் முறையாக மக்கள் சந்திப்பை நடத்தி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை முன்னுரிமைப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்ளாமல், மாறாக தமது அல்லக்கைகள் ஊடாக அவர்களின் தெரிவின் அடிப்படையிலேயே அபிவிருத்திகளை மேற்கொண்டனர். எத்தனையோ முன்னுரிமைப்படுத்தப்பட்ட மிகவும் மோசமான வீதிகள் இருக்கின்றபோது பல முன்னுரிமையற்ற சிறிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு. நிச்சயமாக ஒவ்வொரு  கட்சிகளும் தென்மராட்சியில் தமது தேர்தல் அலுவலகங்களை நிறுவி அலங்கரிப்பர். தமது தேர்தல் பணிகளுக்காக எமது இளைஞர், யுவதிகள் பலரை பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி தமது அலுவலகத்துக்கு அழைப்பர்.  இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் தமது தேவைகளுக்காக எமது மக்களைப் சடப்பொருள்கள் போன்று பாவிப்பார்கள். ஆனால், இவர்களின் பசப்பு வார்த்தைகளைக் கண்டு மக்கள் ஏமாறாமல் கல்லால் எறிந்து தூய்மையான எமது பிரதேசத்தை விட்டு அவர்களை அகற்றவேண்டும்.

ஆனால்,  தென்மராட்சி மக்கள் தீர்க்கமான முடிவெடுக்கவேண்டிய கட்டாய நிலை ஒன்று உள்ளது. கடந்த கால அனுபவங்களால் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறை நாடாளுமன்றுக்கு ஒட்டுமொத்த தென்மராட்சி மக்களும் இணைந்து ஒருவரைத் தெரிவுசெய்யவேண்டிய கடப்பாடு உள்ளது. எமது பிரதிநிதி எமது பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும், எமது மக்களுக்கு தன்னலமற்று சேவையாற்றுகின்ற ஒரு சமூகசேவைத் தொண்டனை மக்கள் சரியாக இனங்காண வேண்டும். அவருக்கே ஒட்டுமொத்த தென்மராட்சி மக்களின் வாக்குகளையும் வழங்கவேண்டும்.. தொடர்ந்தும் போலிகளுக்கு ஏமார்வதற்கு தென்மராட்சி மக்கள் ஒன்றும்  அறிவிலிகள் அல்லர். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்