யாழில் பாவனையற்ற கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் கண்டெடுப்பு

புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலமொன்று   கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ்  நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சிசுவின் சடலம் இன்று (சனிக்கிழமை)  காலை  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்குமென கூறும் பொலிஸார்,  கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுவதாக உறுதிப்படுத்தினர் .

மேலும் கொலை செய்யப்பட்டு பையில் சுற்றப்பட்ட நிலையில் அது கிணற்றில் போடப்பட்டு இருக்கலாமெனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் மலஜலம் கழிக்க சென்ற ஒருவர், துர்நாற்றம் வீசுவதை கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். இதன்போது அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது .

அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் அவ்விடத்திற்கு வருகை தந்த அவர்கள், மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டனர் .

குறித்த சிசுவின் சடலம் தொடர்பாக புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

மேலும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

அத்துடன் சந்தேகநபரான தாய் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்