ரஞ்சன் எம்.பி. எப்படி சிக்கினார்? பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசிக் கலந்துரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளை, பொலிஸாரே சமூக வலைத்தளங்களுக்கு வெளியிட்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் குரல் பதிவுகள் தொடர்பான பொறுப்பு, இதுவரை காலமும் அவற்றைக் கூடவே வைத்திருந்தவர்களையே சாரும் என்றும், இந்த விடயத்தில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைப்பது, விசாரணைகளுக்குத் தடையாக இருக்கும் என்றும், இது பற்றிய தவறான கண்ணோட்டமொன்று, பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“2020 ஜனவரி மாதம் 02அம் திகதியன்று, பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டோ சாரதியொருவர், தனது ஓட்டோவில், பயணி ஒருவரால் கைவிடப்பட்ட வன்தட்டு ஒன்று, (External Hard drive), மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகரான ஜயந்த பெரேராவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்தட்டைப் பரிசோதனை செய்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசியினூடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் பல அடங்கிய குரல் பதிவுகள் ஏராளமாகக் காணப்பட்டன.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹிருணிகா பிரேமசந்திர எம்.பி., மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பத்மினி என்.ரணவக்க, இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி தில்ருக்ஷி டயஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட அலைபேசிக் கலந்துரையாடல்களும், அந்த வன்தட்டில் அடங்கியிருந்தன.

ரஞ்சன்  ராமநாயக்க எம்.பி., மாதிவெலயிலுள்ள எம்.பி.க்களுக்கான வீட்டுத் தொகுதிக்குள், துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகின்றார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவைக் கொலை செய்வதற்காகவே, அவர் அவ்வாறு அந்தப் பயிற்சியை எடுக்கிறார் என்றும், அந்த வன்தட்டில் குரல் பதிவொன்று காணப்பட்டது.

இந்தப் பதிவை அடிப்படையாகக் கொண்டு, ரஞ்சனின் வீட்டைச் சோதனையிட்டு, கொலைக்கான முயற்சி ஏதும் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றதா என்பதைக் கண்டறிவதற்காக, மாதிவல எம்.பிக்களின் வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள இலக்கம் 05 வீட்டைச் சோதனையிட, நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தினூடாக அனுமதி கோரப்பட்டது. இதற்கமைய, 2020.01.04ஆம் திகதியன்று, அந்த வீட்டைச் சோதனையிடுவதற்கு, மிரிஹானை பொலிஸாருக்கு அனுமதி கிடைக்கப்பெற்றது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியைக் கொண்டு, ரஞ்சன் எம்.பியின் விருப்பத்துடன், குறித்த வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, ரஞ்சனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வீட்டுப் பணியாளர்களும் காணப்பட்டனர். அத்துடன், அவர்கள் தரப்புச் சட்டத்தரணி ஒருவரும், அங்கு வந்திருந்தார்.

இதற்கமைய, 2020 ஜனவரி 04ஆம் திகதியன்று மாலை 3 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியில், அந்த வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, எம்.பியின் படுக்கையறை மற்றும் அதனையொட்டியுள்ள மற்றுமொரு அறை என்பன சோதனையிடப்பட்ட போது, பல பொருட்கள், பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டன.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்யப்படாத CZ 75 BA186950 இலக்கத்தையுடைய 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் 127 என்பன கைப்பற்றப்பட்டன.

அத்துடன், மடிகணினிகள் 02,  வெளிப்புற வன்தட்டுக்கள் (External Hard Drive) 04, வன்தட்டுக்கள் (Hard Drive) 05, அலைபேசி 01,  பல்வேறு வகையான டீ.வி.டீக்கள் 164, வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் 02 என்பனவும், அந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.

மேற்படி கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக்கான ரவைகள் 150 காணப்பட வேண்டுமென்கிற போதிலும், அந்த வீட்டிலிருந்து 127 ரவைகள் மாத்திரமே கைப்பற்றப்பட்டன. 23 ரவைகள் பற்றிய விவரங்கள் இல்லை. அதனால், அவற்றை அவர், பிரிதொரு தவறான செயற்பாட்டுக்குப் பயன்படுத்தி இருப்பாரோ அல்லது, அவ்வாறான தவறான செயற்பாட்டுக்காக, அந்த ரவைகளை வேறு நபர்களுக்குக் கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம், பொலிஸாருக்கு எழுந்தது. இதனடிப்படையிலேயே, 2020.01.04ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு, ரஞ்சன் எம்.பி கைது செய்யப்பட்டார்.

அத்துடன், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருள்கள், ரஞ்சன் எம்.பியின் இடது கைப் பெருவிரல் அடையாளர்துடன் சீல் வைக்கப்பட்டு, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக, அரச பகுப்பாய்வுப் பிரிவுக்கும் ஒப்படைக்கப்பட்டன.

தவிர, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் குரல் பதிவுகளை, பொலிஸார் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படவில்லை என்பதை பொறுப்புடன் அறிவித்துக்கொள்கின்றோம்” என்று பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

…………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்