தனது பழைய ஆயுத குழுவிற்கு புத்துயிர் கொடுக்கவே கருணா களமிறங்கியுள்ளார் – கோடீஸ்வரன்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருப்பது தனது பழைய ஆயுத குழுவிற்கு புத்துயிர் கொடுக்கவே என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தான் பதவியில் இருக்கும்போது அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு சில இடங்களுக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். 10 வருடங்கள் கடந்த பின்னர் தற்போது அபிவிருத்தி செய்வதாக பொய் கதைகளை கூறி ஏமாற்றி வருகிறார்.

முன்னாள் கருணா குழுவோடு இயங்கியவர்களை தேடிப்பிடித்து பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இவர்களின் வேலைத்திட்டங்கள் மீண்டும் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டமாகவே நான் பார்க்கின்றேன்.

கடந்த காலங்களிலே பல கடத்தல்களையும் கொள்ளைகளையும் கொலைகளையும் செய்த நபர்கள் உள்வாங்கி மீண்டும் இந்த நாட்டிலே ஒரு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முனைகின்றார்.

இப்படியான குழுக்கள் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதை தடுக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் இந்த அரசு இருக்கின்றது. அந்த வகையிலே இந்த மக்களையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது.

இவ்வாறான நபர்கள் வெவ்வேறு வகைகளில் மாயாஜால வித்தை காட்டி அம்பாறை மாவட்டத்தில் உள்நுழைய பார்க்கின்றனர். இவர்களுக்கு தகுந்த பாடத்தை தமிழ் மக்கள் புகட்ட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்