புத்திஜீவிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கோட்டாபய

நாட்டின் துரித அபிவிருத்திக்காக புத்திஜீவிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயர்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் உறுதியளிக்குமாக இருந்தால் இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

அத்தோடு, உயர் கல்வித் துறையை நாட்டுக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகக்கழகம் உள்நாட்டில் மட்டுமன்றி பிராந்தியத்திற்கே முன்னுதாரணமான உயர் கல்வி நிலையமாக மாற வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு கூறினார்.

இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய கல்வி முறை பரீட்சையை மையமாகக்கொண்டதாகும். அது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் குறுகிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது என்றும் அறிவு, திறன் மற்றும் ஆற்றல்களை கருத்திற்கொள்ளாது பரீட்சையை மையமாகக்கொண்டு எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரச வளங்களின் பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொழிற் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு விளக்கினார்.

அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்