வெளிநாட்டில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழப்பு – சடலங்களை கொண்டுவர நடவடிக்கை

அஸர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று இலங்கை மாணவிகளின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அதற்கமைய அவர்களின் சடலங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் நாட்டுக்கு கொண்டுவர முடியும் என அவர்களின் உறவினர்களிடம் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆசிய நாடான அஸர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள மேற்கு கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் குறித்த மூன்று இலங்கை மாணவிகளும் கல்வி கற்றுவந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்கள், 21, 23 மற்றும் 25 வயதுடைய பெண்களாவர். அவர்களில், 21 மற்றும் 23 வயதுடைய இருவரும் சகோதரிகள் என்றும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 16ஆம் திகதியே அவர்கள் அஸர்பைஜானுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த நாட்டிலுள்ள கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் துறை கற்கை நெறியை பயில்வதற்காக அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த, பிலியந்தலை – பொகுந்தர பகுதியைச் சேர்ந்த அவர்களின் மாமியார் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

இதேநேரம், சம்பவத்தில் உயிரிழந்த 25 வயதுடைய மாணவி, களனியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அஸர்பைஜான் வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்