‘ஜெனிவா’வைக் காட்டி எம்மை மிரட்ட முடியாது – கோட்டா அரசு எகத்தாளம்

ஜெனிவாத் தீர்மானத்தை வைத்து சர்வதேச நாடுகள் கோட்டாபய அரசை வெருட்ட – மிரட்ட முடியாது. எங்களை அடிபணியவைக்கவும் முடியாது.”

– இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜெனிவாத் தீர்மானத்தை கோட்டா அரசு நிராகரித்தால் சர்வதேச சமூகத்தின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களை நாம் அடியோடு நிராகரித்திருந்தோம். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் தலைமையிலான அணியினர்தான் ஜெனிவாவின் புதிய தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தார்கள். இதற்கும் தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது தொடர்பில் இந்த
அரசுபொறுப்புக்கூற வேண்டிய அவசியமும் இல்லை.

ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானத்தை சர்வதேச நாடுகள் நிறைவேற்றினாலும் அது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ள மாட்டோம். எமக்கு எதிராக ஆயிரம் தீர்மானங்களை நிறைவேற்றினாலும் சர்வதேச நாடுகள் எம்மை அடிபணியவைக்கவே முடியாது.

கோட்டாபய அரசு மக்களின் ஜனநாயக ஆணைக்கேற்ப நாட்டின் ஆட்சிப்பொறுப்பைக் கையில் எடுத்துள்ளது. எனவே, இந்த நாட்டின் இறையாண்மையில் வெளிநாடுகள் கைவைக்கவே முடியாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்