எமக்கு வழிகாட்டியாக இருந்த மாவை அண்ணன் எம்மை விமர்சித்தால் பரவாயில்லை! தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரியாதவர் தான் கோடீஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் தோல்வி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் ஒன்றாக நின்றபோது அவர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றித்து நின்றது, அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு எதிராக முழுமூச்சுடன் இயங்கி வருகின்ற ஹரிஸ் எம். பியுடன் ஒரே மேடையில் கோடீஸ்வரன் தோன்றினார் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர், மீள்குடியேற்ற துறை முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

காரைதீவு மக்களை நேற்று ஞாயிறு மாலை காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழக மண்டபத்தில் சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ஓய்வு நிலை ஆசிரியர் எஸ். தில்லையம்பலம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

நான் சாதாரண முஸ்லிம் மக்களை குறை சொல்ல மாட்டேன். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து வேலைகளையும் இனவாத முஸ்லிம் தலைவர்கள் திட்டமிட்ட வகையில் நுட்பமாக முன்னெடுத்து வருகின்றனர். இதனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர் பிரதேசங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
இவர்கள் காரணமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எத்தனையோ இன்னல்கள், பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்களால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்தி புறக்கணிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இனவாத முஸ்லிம் தலைவர்கள் சஜித் பிரேமதாஸவுடன் ஒன்றாக நின்றனர். அநேகமான தமிழ் தலைவர்கள் ராஜபக்ஸக்களுடன் ஒன்றாக நின்றனர். ஆனால் இனவாத முஸ்லிம் தலைவர்களுடன் ஒரே முகாமில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கும்மி அடித்தது.
ஹரிஸ் எம். பியுடன் ஒரே மேடையில் அமர்ந்தார் கோடீஸ்வரன் எம். பி. ஆனால் அவர் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு குரல் கொடுப்பது வேடிக்கையான விடயம்தான். ஏனென்றால் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த விடாமல் மும்முரமாக இயங்குபவர் ஹரிஸ்.
நாம் கோதாபய ராஜபக்ஸதான் நிச்சயம் வெல்வார் என்று படித்து படித்து சொன்னோம். ஆனால் எமது தமிழ் மக்கள் கேட்கவே இல்லை. தோல்வி வேட்பாளரான சஜித் பிறேமதாஸவுக்கே வாக்களித்து விட்டனர். இப்போது நான் சொல்கின்றேன். இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு ராஜபக்ஸக்களின் ஆட்சிதான் நீடிக்கும். இதை நாம் மிக நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும். வருகின்ற பொது தேர்தலில் சரியான வியூகம் வகுத்து செயற்பட வேண்டும். அதன் மூலமாக அறிவும், ஆற்றலும் உள்ள பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்ட தமிழர்கள் பெறுதல் வேண்டும்.

நான் இப்பொழுது எம். பியோ, அமைச்சரோ அல்லன். ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருமே நன்றாக தெரிந்தவர்கள். அதை வைத்து கொண்டுதான் என்னால் முடிந்த அரசியல், சமூக, பொதுநல பணிகளை இப்போது மேற்கொண்டு வருகின்றேன்.

நான் பிரதி அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தை ஓரளவுக்கு கட்டி எழுப்பி தந்திருக்கின்றேன். அம்பாறை மாவட்டத்தில் கணிசமான சில வேலை திட்டங்களையே முன்னெடுக்க முடிந்தது. இப்போது அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்கள் அனைத்தும் நேரில் கள விஜயம் செய்து எமது மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றேன்.
தற்போது இருப்பது இடைக்கால அரசாங்கம். எனவே பெரிதாக வேலை திட்டங்களை செய்ய முடியாஹு. நிர்வாக ரீதியான விடயங்களை செய்ய கூடியதாக உள்ளது.

வருகின்ற மார்ச் அளவில் பொதுதேர்தல் வருகின்றது. எனக்கு 05 வருட காலத்தை தாருங்கள் என்று உங்களை கேட்கின்றேன். எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவை கல்முனை பிரச்சினையை போல அல்லது அதை காட்டிலும் பாரதூரமானவையும்கூட அதில் முதல் மூன்று வருடங்களுக்குள் அம்பாறை மாவட்டத்தில் எமது மக்களின் வாழ்க்கை நிலையை அனைத்து விதங்களிலும் முன்னேற்றி தருவேன். நான்தான் வர வேண்டும் என்று இல்லை. பொது சின்னத்தில் தமிழ் கட்சிகள் போட்டியிட்டு பொருத்தமான ஒருவர் எமது மக்களால் தெரிவு செய்யப்பட முடியும்.

தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரியாத கற்று குட்டிதான் கோடீஸ்வரன் எம். பி. இவரை போன்றவர்களுக்கு எம்மை விமர்சிக்க அருகதை இல்லை. மாவை அண்ணன் போன்றவர்கள் விமர்சித்தால் பரவாயில்லை. ஏனென்றால் அவர் தமிழரசு கட்சியின் தலைவர். எமக்கு வழி காட்டியாக இருந்தவர் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்