அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் – 15 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அரசாங்கம் தீர்மானம்

அஸர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவிகளின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான செலவுகளை ஏற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய குறித்த செலவுகளுக்காக 15 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாணவிகளின் பெற்றோர், வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோதே இவ்வாறு நிதியுதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவிகளின் பிரேத பரிசோதனை அஸர்பைஜானில் முடிவடைந்துள்ளது. ஈரானிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சடலங்களை அனுப்பி வைக்கும் காலப்பகுதி குறித்து தகவலெதுவும் வெளியாகவில்லை.

ஆசிய நாடான அஸர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள மேற்கு கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் குறித்த மூன்று இலங்கை மாணவிகளும் கல்வி கற்றுவந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்கள், 21, 23 மற்றும் 25 வயதுடைய பெண்களாவர். அவர்களில், 21 மற்றும் 23 வயதுடைய இருவரும் சகோதரிகள் என்றும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 16ஆம் திகதியே அவர்கள் அஸர்பைஜானுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த நாட்டிலுள்ள கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் துறை கற்கை நெறியை பயில்வதற்காக அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த, பிலியந்தலை – பொகுந்தர பகுதியைச் சேர்ந்த அவர்களின் மாமியார் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

இதேநேரம், சம்பவத்தில் உயிரிழந்த 25 வயதுடைய மாணவி, களனியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்