இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது : யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்

கலைகளைப் பொறுத்த வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை காணப்பட்டு வருகின்றது என வவுனியாவில் நேற்றையதினம் (12.01.2020) இடம்பெற்ற நிகழ்வோன்றில் உரையாற்றும் போது யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இந்தியாவைப் போன்றே இசை நடனம் வாத்தியம் கலைகள் என பல்வேறு கலைகளில் வட மாகாணமும் முதன்மை பெற்று விளங்குகின்றது. கலைகளை வளர்ப்பதில் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் தனது பங்களிப்பை இயன்றவரை சிறப்பாக ஆற்றி வருகின்றது. தூதரகத்தின் இந்தியா கோர்ணர் பகுதியினால் கர்நாடக இசை ,யோகா மற்றும் இந்தி வகுப்புக்கள் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் இவ்வருடம் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் இயங்கி வருகின்ற பத்து கலை வளர்க்கும் மன்றங்களுக்கு கலை நிகழ்வுகளை நடாத்துவதற்கென இலங்கை ரூபாய் ஐம்பது இலட்சம் வழங்கப்படுகின்றது. அதனை விட வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இந்தியாவின் தலை சிறந்த கலைஞர்களை வரவழைத்து அவர்களைக் கொண்டு அளிக்கைகளை நடாத்துவதுடன் கலைத்துறை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சிப்பட்டறைகளையும் நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் வரும் 26ம் திகதி குடியரசு தினத்தில் இந்தியாவில் இருந்து வீணை இசைக்கலைஞர்களும் கதக் நடனக் கலைஞர்களும் வருகை தந்து நிகழ்வுகளும் பயிற்சிப்பட்டறைகளையும் நடாந்தவுள்ளனர்.  ஆகவே நீங்களும் இவற்றில் கலந்து கொண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்தி உங்களின் கலைத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும் . இன்றைய இளம் கலைஞர்கள் தமது திறன்களை வெளிப்படுத்துவதுடன் நின்று விடாமல் இக் கலைகளை அதன் தனித்துவம் மாறாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் உரியதாகும்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்த கலை விற்பன்னர்களாக வருவதுடன் மட்டும் நின்றுவிடாது தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறை கலைஞர்களை கலைகளின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு அதற்கு யாழ் இந்தியத் தூதரகம் தன்னால் இயன்ற பதவிகளை செய்யும் என தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்